வடிவேலுவுக்கு முனைவர் பட்டம்: அண்ணா பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பலே கில்லாடிகள்
இரு தினங்களுக்கு முன்னர், சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில், வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு கவுரவ முனைவர் பட்டம் தந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. 'சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம்' என்ற பெயரில் அங்கீகரிக்கப்படாத ஒரு நிறுவனம், அரசு முத்திரையை பயன்படுத்தி, அண்ணா பல்கலைக்கழகத்தை ஏமாற்றி உள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல்கலைக்கழகத்தை சாராத ஒரு அமைப்பு, சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில், 'அரசு' சார்பில் விழாவை நடத்தி, மோசடியை அரங்கேற்றி உள்ளது. இந்த விழாவில் வடிவேலு பங்கு பெறவில்லை என்றாலும், அவர் வீடு தேடி சென்று இந்த முனைவர் பட்டத்தை தந்துள்ளது இந்த போலி கும்பல்.
ஓய்வு பெற்ற நீதிபதியையும் ஏமாற்றிய போலி கும்பல்
இந்த விழாவிற்கு இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், கஜராஜ், நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ், என பல பிரபலங்களை பங்குபெற வைத்து, 50க்கும் மேற்பட்டோருக்கு, 'கவுரவ டாக்டர்' பட்டம் என்ற பெயரில், போலி டாக்டர் பட்டங்களை, ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் தந்துள்ளது அந்த மோசடி கும்பல். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், அண்ணா பல்கலைகழகம் என்பதை பெரிதாக அச்சிட்டுள்ளனர். அதனுடன், அரசு முத்திரையும் அடித்து அரசு விழா போல செட்அப் செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகாரளிக்க அண்ணா பல்கலை. முடிவு செய்து உள்ளது. இந்த பலே கில்லாடி கும்பலை பிடிக்க அரசும், கவர்னர் மாளிகையும் அறிவுறித்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.