நடிகை ஜெயப்ரதாவின் 6 மாத சிறை தண்டனையினை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்
பிரபல சினிமா நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, சென்னை அண்ணாசாலை பகுதியில், சென்னையை சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு உள்ளிட்டோரோடு இணைந்து 'ஜெயப்பிரதா' என்னும் திரையரங்கை நடத்தி வந்துள்ளார். அதில் பணிபுரிந்த ஊழியர்களிடம் வசூலிக்கப்பட்ட, இஎஸ்ஐ தொகையினை அரசு தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் அவர் செலுத்தவில்லை என்று புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அதன் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இதில் சம்பந்தப்பட்ட ஜெயப்பிரதா மற்றும் ராம்குமார், ராஜ்பாபு உள்ளிட்ட 3 பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த தீர்ப்பினை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
'ரூ.20 லட்சத்தினை டெபாசிட் செய்தால் மட்டுமே ஜாமீன்' - நீதிபதி உத்தரவு
ஆனால் எழும்பூர் நீதிமன்ற உத்தரவினை நிறுத்தி வைக்க முடியாது என்றுக்கூறி இவ்வழக்கினை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத்தொடர்ந்து மீண்டும் இந்த உத்தரவினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா தரப்பு மனுதாக்கல் செய்தது. இந்நிலையில் இம்மனுவினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சென்னை முதன்மை நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை ரத்து செய்ய மறுத்து மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், அடுத்த 15 நாட்களில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்றும், இ.எஸ்.ஐ.'க்கு செலுத்தவேண்டிய ரூ.20லட்சத்தினை டெபாசிட் செய்யவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து, ரூ.20 லட்சத்தினை டெபாசிட் செய்தால் மட்டுமே இவர்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி உத்தரவிட்டார்.