திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்; 224 பேருக்குக் காசோலைகள் வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 224 தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியக் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் உத்தரவின்படி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தயாரிப்பாளர்களுக்கு இந்த காசோலைகளை நேரில் வழங்கினார். நல்ல கருத்துகளையும் சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் சிறிய முதலீட்டுப் படங்களை ஊக்குவிக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பரிந்துரை
நீதிபதி தலைமையிலான தேர்வுக்குழுவின் பரிந்துரை மற்றும் நிதி விவரம்
அரசு மானியம் பெற விண்ணப்பித்த திரைப்படங்களை ஆய்வு செய்து தகுதி வாய்ந்த படங்களைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழு ஆண்டிற்கு 28 திரைப்படங்கள் வீதம் 8 ஆண்டுகளுக்கு மொத்தம் 224 திரைப்படங்களை அரசுக்கு பரிந்துரை செய்தது.
தேர்வு செய்யப்பட்ட 224 தயாரிப்பாளர்களுக்கும் தலா ₹7 லட்சம் வீதம் மொத்தம் ₹15 கோடியே 68 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் இந்த விழாவில் வழங்கப்பட்டன.
விழிப்புணர்வு படங்கள்
சமூக விழிப்புணர்வு படங்கள் மற்றும் அமைச்சரின் உறுதியளிப்பு
விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "வணிக நோக்கத்தைத் தாண்டி சமூக அக்கறையுடன் நல்ல கருத்துகளை வெளிப்படுத்தும் தயாரிப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
கருத்தம்மா போன்ற திரைப்படங்கள் பெண் சிசுக்கொலைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தன." எனக் குறிப்பிட்டார்.
மேலும் இனிவரும் காலங்களில் எவ்விதத் தடையுமின்றித் தயாரிப்பாளர்களுக்கான விருதுகளும் மானியங்களும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், திரையுலகின் வளர்ச்சிக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.