நடிகர் ரகுவரன் மரணத்திற்கு மன அழுத்தமும் ஓர் முக்கிய காரணம் - சகோதரர் உருக்கம்
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமா உலகில் ஓர் முக்கிய வில்லனாக கருதப்பட்டவர். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நாயகர்களோடு நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ரகுவரன் கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி மரணமடைந்தார். இவர் தனது 49வது வயதில் காலமானார் என்றாலும், தனது ரசிகர்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. நடிகை ரோகிணியினை திருமணம் செய்து கொண்ட ரகுவரனுக்கு, சாய் ரிஷிவரன் என்னும் மகன் உள்ளார். இவர் மறைந்து 15 வருடங்கள் உருண்டோடிய நிலையில், அவரது சகோதரன் ரமேஷ்வரன், ரகுவரன் மரணம் குறித்து அண்மையில் ஒரு யூடியூப்-சேனலில் உருக்கமான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
தனது மகன் ரிஷிவரனை நினைவுக்கூரிய காரணத்தால் நடிக்க ஒப்புக்கொண்ட ரகுவரன்
அதில் அவர், "ரகுவரனின் மரணத்திற்கு அதிகளவு மது அருந்தியது தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் அவர் மரணத்திற்கு மன அழுத்தமும் ஓர் முக்கிய காரணம்" என்றும், "ரகுவரன் கடைசியாக நடித்த 'யாரடி நீ மோகினி' படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த பின்னர் அவர் யாருடனும் பேசாமல் மிகுந்த மன சோர்வோடு காணப்பட்டது, எனக்கு மிகுந்த கவலையினை அளித்தது" என்றும் கூறியுள்ளார். 'யாரடி நீ மோகினி' படத்தில் தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்குமாறு அப்பட இயக்குனர் இவரை கேட்டபொழுது படத்தின் கதை பிடித்துப்போனது. மேலும் இதில் தனுஷ் கதாபாத்திரம், தனது மகன் ரிஷிவரனை நினைவுக்கூரிய காரணத்தால் ஒப்புக்கொண்டார் என்றும் ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படம் வெளியாகும் முன்னரே ரகுவரன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.