கமல்ஹாசனின் புதிய பட அறிவிப்பை கடுமையாக விமர்சித்த 'மேற்கு தொடர்ச்சி மலை' இயக்குநர் லெனின் பாரதி
செய்தி முன்னோட்டம்
நடிகர் கமல்ஹாசனின் புதிய திரைப்பட அறிவிப்பில் இடம்பெற்றுள்ள வன்முறை வாசகத்தை கடுமையாக விமர்சித்து 'மேற்கு தொடர்ச்சி மலை' பட இயக்குநர் லெனின் பாரதி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பில் வெளியான 'மேற்கு தொடர்ச்சி மலை' திரைப்படத்தை இயக்கித் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் லெனின் பாரதி. இவரது முதல் படம் நியூயார்க் சர்வதேசத் திரைப்பட விழா உள்ளிட்ட பல சர்வதேச தளங்களில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பின்னணி
சர்ச்சை பின்னணி: கமல்ஹாசனின் புதிய பட அறிவிப்பு
இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் (சித்தா, பண்ணையாரும் பத்மினியும் புகழ்) இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் (KH 237) அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
அந்த அறிவிப்புப் பதிவில், "பழிவாங்கல் ரத்தத்தால் மட்டுமே சரி செய்யப்படும்" என்ற வாசகம் பிரதானமாக இடம்பெற்றிருந்தது.
இந்த வன்முறையைத் தூண்டும் வகையிலான வாசகமே தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
கண்டனம்
இயக்குநர் லெனின் பாரதியின் கண்டனம்
கமல்ஹாசனின் இந்த பதிவைச் சுட்டிக்காட்டி இயக்குநர் லெனின் பாரதி தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,"கதாநாயக மயக்க சினிமாவால் ஏற்கனவே இளைஞர்கள் மனதில் வன்முறையின் ரத்த வாசனை வீசிக் கொண்டிருக்கிறது. இதில் கமல்ஹாசன் கொஞ்சமும் சமூக சிந்தனையில்லாமல் 'பழிவாங்கல் ரத்தத்தால் மட்டுமே சரி செய்யப்படும்' என தனது அடுத்த திரைப்பட விளம்பரத்தை முன்னிறுத்துவது கண்டனத்திற்குரியது" என பதிவிட்டுள்ளார்.
சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய மூத்த கலைஞர் ஒருவர், திரைப்பட விளம்பரத்திற்காக இதுபோன்ற தீவிர வன்முறை வாசகங்களைப் பயன்படுத்துவது சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என அவர் தனது கவலையைப் பதிவு செய்துள்ளார்.