"பதில் சொல்ல நேரமில்லை": நயன்தாரா விவகாரத்தில் மௌனம் கலைத்த இயக்குனர் கஸ்தூரி ராஜா
நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாராவின் விவகாரத்தில், நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான 'நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல்' தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே நடந்து வரும் சட்ட மோதல் தற்போது ஒரு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தனுஷ் மௌனம் காத்து வரும் நிலையில், அவரது தந்தை கஸ்தூரி ராஜா தற்போது மவுனம் கலைத்துள்ளார். சமீபத்திய அறிக்கையில், நயன்தாரா தனது ஆவணப்படத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளைப் பயன்படுத்த தனுஷிடம் இரண்டு ஆண்டுகளாக NOC ஒப்புதல் கோரி வருவதாக கூறிய குற்றச்சாட்டை கஸ்தூரி ராஜா கடுமையாக மறுத்துள்ளார்.
2 ஆண்டுகள் காத்திருப்பது உண்மையான தகவல் அல்ல
இயக்குனர் கஸ்தூரி ராஜா சமயத்திடம் பேசுகையில்,"எங்களுக்கு வேலைதான் முக்கியம். நாங்கள் முன்னோக்கி ஓடுகிறோம். நம்மைத் துரத்துபவர்களுக்கோ, நம்மைப் பற்றிப் பேசுபவர்களுக்கோ பதில் சொல்ல நேரமில்லை" என்றார். மேலும், "என்னைப் போலவே எனது மகனும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறான். தனுஷிடம் இருந்து NOC (ஆட்சேபனை இல்லா சான்றிதழ்) பெற இரண்டு ஆண்டுகள் காத்திருந்ததாக நயன்தாரா கூறியது தவறானது" என்றும் அவர் கூறினார். நயன்தாரா சொன்னது போல் இரண்டு வருடங்கள் காத்திருப்பது உண்மை தகவல் அல்ல என்று மீண்டும் வலியுறுத்தி கூறினார்.
தனுஷுக்கு நயன்தாரா எழுதிய ஓபன் லெட்டர்
ஒரு ஓபன் லெட்டரில், நயன்தாரா தனுஷுடனான சட்டப் போராட்டம் குறித்த தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். அவர் அதில், "எங்கள் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்பட வெளியீட்டிற்கு உங்களுடன் இரண்டு வருடங்கள் போராடி, NOCக்காக உங்கள் ஒப்புதலுக்காகக் காத்திருந்தோம். இறுதியாக நாங்கள் அந்த போராட்டத்தை கைவிட முடிவு செய்தோம்." "எங்கள் தனிப்பட்ட சாதனங்களில் படமாக்கப்பட்ட சில வீடியோக்களின் (வெறும் 3 வினாடிகள்) உபயோகத்தை நீங்கள் கேள்வி எழுப்பிய அந்த வரிகளைப் படித்து நாங்கள் திடுக்கிட்டோம் - அதுவும் ஏற்கனவே பொதுவில் இருக்கும் BTS காட்சிகள்." எனக்கூறியிருந்தார்.
நயன்தாரா மீது தனுஷ் சட்ட நடவடிக்கை
தனுஷ், சர்ச்சையில் சிக்கியுள்ள நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் தனது தயாரிப்பான நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக நயன்தாரா மீது ₹10 கோடி கேட்டு வழக்குத் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 'நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல்' படத்தின் டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் நேற்று, திங்கள்கிழமை (நவம்பர் 18) Netflixல் திரையிடப்பட்டது.