சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம், திருவள்ளுவர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பின்கதை சுருக்கம் பின்வருமாறு: நடிகை மற்றும் VJ சித்ரா, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நாடகம் மூலம் பிரபலமானவர். இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், திருவள்ளுவர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், அவரின் காதல் கணவர் ஹேமந்த் தான் முக்கிய குற்றவாளி என சித்ராவின் பெற்றோர்கள் சந்தேகித்தனர். அதோடு வரதட்சணை கொடுமைக்கு சித்ரா ஆளாகி இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
அரசியல் தொடர்புடைய ஹேமந்த்
நடிகை சித்ரா மரணம் அடைந்ததும் பலரும் ஹேமந்த் தான் கொலை செய்திருக்க கூடும், அல்லது கொலைக்கு தூண்டி இருக்க கூடும் என கூறினார். அதனை தொடர்ந்து ஹேமந்த் கைது செய்யப்பட்டு, உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தன் மீது எந்த தவறும் இல்லையெனவும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதெனவும், ஒரு அரசியல் புள்ளி தான் இதற்கு காரணம் எனவும் ஹேமந்த் பின்னர் கூறி இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு திருவள்ளுவர் மகளிர் நீதி மன்றத்தில் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ், வழக்கை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரியும், வழக்கை விரைந்து முடிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.