'எங்க வீட்டு வேலன்' முதல் 'பத்து தல' வரை: சிம்புவின் 40வது பிறந்தநாள் இன்று!
'ஐ யாம் எ லிட்டில் ஸ்டார்' என்று தமிழ் சினிமா ரசிகர்களை, சிறு வயதிலேயே தனது நடிப்பாலும், நடனத்தாலும் கவர்ந்து இழுத்தவர் தான் நடிகர் சிலம்பரசன். சிம்பு என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவரின் 40-வது பிறந்தநாள் இன்று. அவரின் திரையுலக பயணத்தில் இருந்து சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ: 'உறவை காத்த கிளி' என்ற படத்தில், குழந்தையாக தனது கோலிவுட் பயணத்தை தொடங்கினார் சிம்பு. 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த சிம்பு, பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த பிறகும், மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஹீரோவாகவே வலம் வந்தார். பல தனிப்பட்ட காரணங்களினால், உடல் எடைக்கூடிய சிலம்பரசனின் கோலிவுட் பயணம், திடீரென்று சிக்கலை சந்தித்தது.
மன்மதனிலிருந்து ஆத்மனாக உருமாறிய சிம்பு!
கொரோனா லாக்டவுனின் போது, ஆன்மீக தேடலில் ஈடுபட்ட சிம்பு, தீவிர உடற்பயிற்சியில் இறங்கினார். அந்த இரண்டு வருடங்களில், கிட்டத்தட்ட 30 கிலோ எடையைக் குறைத்து, மதுவை விட்டொழித்து, சைவதிற்கு மாறினார். அதற்கு முன்பு அவர் சந்தித்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்தவர், முதலில் சுசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்' என்ற படத்தை தேர்ந்தெடுத்தார். சிம்புவின் ட்ரிம் தோற்றமும், அவர் நடிப்பும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர், 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' என வரிசையாக வெற்றி படங்களை தந்தவரின் அடுத்த ரிலீஸ், ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில், 'பத்து தல'. பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என்று பன்முக திறமைகளை கொண்ட சிம்புவிற்கு, சமையல் கலையும் அத்துப்படி என்பது கூடுதல் தகவல்.