துரோணாச்சார்யாவின் மகன் அஸ்வத்தாமா: கல்கி 2898 கிபியில் அமிதாப்பச்சனின் ரோல் இதுதான்!
நேற்று ஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை KKR மற்றும் RCB இடையேயான விறுவிறுப்பான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டி நிறைவு பெற்றநேரத்தில், 'கல்கி 2898 AD' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்திலிருந்து அமிதாப் பச்சனின் தோற்றத்தின் டீசரைப் பகிர்ந்துள்ளனர். அதில் அவர் மஹாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான அஸ்வத்தாமாவின் பாத்திரத்தை ஏற்றுள்ளார் என தெரியவந்துள்ளது. KKR vs RCB போட்டியின் முடிவைத் தொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் திரையிடப்பட்ட 21 வினாடிகள் கொண்ட கேரக்டர் ரிவீல் வீடியோ, அமிதாப் பச்சன், சாம்பல் நிறத்தில் உடையணிந்து, ஒரு குகையில், சிவ லிங்கத்திற்கு பூஜை செய்வதாக தொடங்குகிறது. இனிமையான இசையின் பின்னணியில், "உன்னால் இறக்க முடியாதா? நீ தெய்வமா? நீ யார்?" என்று கேள்வி எழுப்பும் குழந்தையின் குரல் கேட்கிறது.
குருவின் மகன் அஸ்வத்தாமா!
மேலும் அந்த டீசரில், குழந்தையின் கேள்விக்கு பதிலளிக்கும் அமிதாப்பச்சன்,"பண்டைய காலத்திலிருந்தே, அவதாரத்தின் வருகைக்காக நான் காத்திருந்தேன். நான் குரு துரோணரின் மகன். அஸ்வத்தாமா" என்று அறிவிக்கிறார். 'கல்கி 2898 AD' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. படத்துக்கு 'கல்கி 2898 கி.பி' என்று ஏன் பெயர் வைத்தது என்பது குறித்து நாக் அஸ்வின்,"எங்கள் படம் மகாபாரதத்தில் தொடங்கி 2898 இல் முடிகிறது. அதுதான் படத்தின் தலைப்பு. இது 'கல்கி 2898 கி.பி' என்று அழைக்கப்படுகிறது" என்று கூறினார். 'கல்கி 2898 கிபி' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் மே 9 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.