ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு மீண்டும் ஒன்று சேரலாம்: சாய்ரா பானுவின் வழக்கறிஞர்
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்கள் திருமண உறவிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இந்த பிரிவிற்கான காரணத்தை இருவரும் பொதுவெளியில் விவாதிக்கவில்லை எனினும் அவர்களின் இந்த திருமண முறிவு அறிவிப்பு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் பிரிந்ததாக அறிவித்ததும், அவர்களது மூன்று குழந்தைகளின் கஸ்டடி குறித்த பல கேள்விகளை எழும்பாமல் இல்லை. சாய்ரா பானு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வந்தனா ஷா, சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது இந்த விஷயத்தைப் பற்றி விவரித்தார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
கஸ்டடி மற்றும் ஜீவனாம்ச விவரங்கள்
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கேட்டபோது, இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று அந்த நேர்காணலில் கூறினார். அவர்களின் பிள்ளைகள் விவரம் அறிந்தவர்கள் என்றும் சிலர் மேஜர் எனவும், அதனால் அவர்கள் யாருடன் வசிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க முடியும் எனக்குறிப்பிட்டார். எனினும் ஜீவனாம்சம் குறித்து வழக்கறிஞர் வந்தனா கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. எனினும் அவருடைய கட்சிக்காரரான சாய்ரா, ஜீவனாம்சம் குறித்து வலியுறுத்துபவர் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
மீண்டும் இருவரும் இணையும் சாத்தியங்களையும் வழக்கறிஞர் மறுக்கவில்லை
வழக்கறிஞர் வந்தனா, இருவரும் சமரசத்திற்க்கு பின்னர் மீண்டும் இணையும் வாய்ப்பை நிராகரிக்கவில்லை. தம்பதியரின் கூட்டு அறிக்கை பிரிவின் வலியை பிரதிபலிக்கிறது அதே நேரத்தில், இணக்கத்தை நிராகரிக்கவில்லை என்பதை அவர் எடுத்துரைத்தார். "நல்லிணக்கம் சாத்தியமில்லை என்று நான் கூறவில்லை. நான் ஒரு நித்திய நம்பிக்கையாளர், நான் எப்போதும் காதல் மற்றும் இணக்கம் பற்றி பேசுகிறேன். கூட்டு அறிக்கை மிகவும் தெளிவாக உள்ளது. இது வலி மற்றும் பிரிவினை பற்றி பேசுகிறது. இந்த முடிவை எடுக்க அவர்கள் நிறைய யோசித்துள்ளார்கள், ஆனால் சமரசம் சாத்தியமில்லை என்று நான் எங்கும் கூறவில்லை, "என்று வந்தனா ஷா பகிர்ந்து கொண்டார். இந்த செய்தி ரசிகர்களின் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.