'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம்
கடந்த ஞாயிற்றுகிழமை, சென்னை ECR-ல் அமைந்துள்ள ஒரு தனியார் திறந்தவெளி வளாகத்தில், ஏஆர் ரஹ்மான் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி, ஒருங்கிணைப்பாளர்கள்களின் அலட்சியபோக்கால், மோசமான விமர்சனங்கள் பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, ECR மற்றும் OMR ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பலநேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏஆர் ரஹ்மான், தான் யாரையும் குறைகூற விரும்பவில்லை எனவும், தானே இந்த அசௌகரியத்திற்கு பொறுப்பேற்பதாகவும் பதிவிட்டு, இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் டிக்கெட்டுகளை புகைப்படம் எடுத்து தன்னுடைய அணியின் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் கோரியிருந்தார். இந்நிலையில், பலரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் , இது பணம் பறிக்கும் ஒரு மோசடி எனவும் குற்றம்சாட்டினர்.
ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு
இதனை தொடர்ந்து ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் ஒரு வீடியோ பதிவு மூலம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில், "இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த அசௌகரியங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் காரணம் இல்லை அவர் குறித்து தவறாக பதிவிட வேண்டாம். செப்டம்பர் 10 ஆம் தேதி நடந்த மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் நிறைய அசௌகரியங்கள் நடந்துள்ளது அதை நாங்கள் மறுக்கவில்லை. நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டியது தான், ரகுமான் சாரின் பொறுப்பு அதை அவர் சிறப்பாக செய்தார். ஏ.ஆர்.ரகுமான் அவர் பணியை சிறப்பாக செய்தார் அவரைத் தாக்கி எந்த பதிவையும் பதிவிட வேண்டாம். கூட்ட நெரிசல், போலி டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தான் காரணம் அதற்கு மன்னிப்பு கேட்கிறோம்" என கூறியுள்ளார்.
ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த்
திருப்பி அனுப்பப்படும் டிக்கெட் பணம்
ஏஆர் ரஹ்மான் உத்தரவாதம் அளித்தது போலவே, இன்று முதல், இசை நிகழ்ச்சியில் டிக்கெட் இருந்தும் பங்கேற்க இயலாதவர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஈமெயில் மூலம் சுமார் 4000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என புகார் தெரிவித்திருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் நகலை சரி பார்த்து கட்டணத்தை திருப்பி அளித்து வருகின்றனர். தற்போது வரை 400 பேருக்கு டிக்கெட் பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.