90களில் இசை நல்லா இருந்ததுன்னு சொல்லி இப்ப பண்றதை மட்டம் தட்டுறாங்க!; இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வருத்தம்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் இந்தித் திரையுலகில் நிலவும் அதிகாரம் மற்றும் மத ரீதியான பாகுபாடுகள் குறித்துப் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இந்திப் படங்களில் தனக்கான வாய்ப்புகள் குறைந்ததற்குப் பின்னால் மத ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், படைப்பாற்றல் இல்லாதவர்கள் கையில் அதிகாரம் சென்றதே இசைக் கலைஞர்களின் பின்னடைவுக்குக் காரணம் என்றும் அவர் சாடியிருந்தார்.
விமர்சனம்
புதிய தலைமுறை மீதான விமர்சனம்
ஹாலிவுட் ரிப்போர்ட்டர் தளத்திற்கு அளித்த பேட்டியில், தற்கால இளைஞர்கள் தன்னை கேஸ்லைட் (Gaslighting) செய்வதாக ரஹ்மான் வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது, "90களில் வந்த ரோஜா போன்ற படங்களின் இசை மிகச் சிறப்பாக இருந்தது" என்று கூறி, இப்போது அவர் உருவாக்கும் இசையைத் தரம் குறைந்ததாகச் சித்தரிக்க முயற்சிப்பதாக அவர் கூறினார். இதுபோன்ற ஒப்பீடுகள் ஒரு கலைஞரின் மனநிலையைப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 2019 முதல் 2025 வரை தான் சும்மா இருக்கவில்லை என்பதைத் தரவுகளுடன் ரஹ்மான் விளக்கியுள்ளார். இந்த 6 ஆண்டுகளில் தமிழ், இந்தி, மலையாளம் என சுமார் 20 முதல் 30 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
2026
ரஹ்மானின் புதிய தொடக்கம்
கடந்த கால விருதுகளான ஆஸ்கார், கிராமி அல்லது 33 ஃபிலிம்பேர் விருதுகளைத் தான் ஒரு சுமையாகக் கருதவில்லை என்று ரஹ்மான் கூறினார். "அவற்றைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால் என்னால் புதிய எதையும் படைக்க முடியாது. அதனால்தான் என் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் பயோவில் எந்த விருது பற்றிய தகவலும் நான் வைக்கவில்லை. 2026 ஆம் ஆண்டை ஒரு புதிய தொடக்கமாகக் கருதி, மிகச்சிறந்த இசையைத் தரப்போகிறேன்" என்று அவர் உறுதியளித்துள்ளார். மத ரீதியான கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால், யாரையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.