பாலிவுட் நடிகருடன் காதலை உறுதி செய்தார் நடிகை தமன்னா
கோலிவுட்டில், கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து கல்லூரி, படிக்காதவன், தர்மதுரை என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தமன்னா பாட்டியா. மும்பையில் பிறந்து வளர்ந்த தமன்னா, சிறு வயதிலேயே பிரபலமான மாடலாக வலம் வந்தவர். அதை தொடர்ந்து தான் படவாய்ப்புகள் குவிந்தன. இதனிடையே, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்தவர், அவ்வப்போது ஹிந்தி படங்களிலும் நடித்தார். 33 வயதான தமன்னா இதுவரை யாரையும் தீவிரமாக காதலித்ததாக செய்திகள் வந்ததே இல்லை. இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும் 'லஸ்ட் ஸ்டோரீஸ்-2 ' என்ற அமேசான் தொடரில் அவருடன் நடிக்கும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.
காதல் குறித்து மௌனம் கலைத்த தமன்னா
விஜய் வர்மா குறித்த எந்த கேள்விக்கும் இது வரை பதில் அளிக்காமல் தவிர்த்து வந்த தமன்னா, முதல்முறையாக ஒரு தனியார் ஊடகத்தின் பேட்டியில், "விஜய் வர்மாவிற்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு. அவர் உடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" எனக்கூறியுள்ளார். இதன் மூலம், அவரின் காதல் உறுதியானது என செய்திகள் கூறுகின்றன. தமன்னாவும், விஜய் வர்மாவும் இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டத்தின் போது முத்தமிட்டுக்கொள்வதை போன்ற புகைப்படம் வெளியான போது வெளியுலகிற்கு இவர்கள் காதலிக்கும் விஷயம் தெரியவந்தது. இவர்கள் முதல்முதலில் சந்தித்ததும், 'லஸ்ட் ஸ்டோரீஸ்-2 ' ஷூட்டிங் போதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.