நயன்தாரா கூறியதன் பேரில், ரஜினி படத்திலிருந்து நீக்கப்பட்டாரா மம்தா மோகன்தாஸ்?
தமிழ் மொழியில், ஒன்றிரண்டு படங்களே நடித்திருந்தாலும், மலையாளத்தில் இன்றும் பிரபலமாக இருப்பவர் நடிகை மம்தா மோகன்தாஸ். 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர், பின்னர், 'குரு என் ஆளு', 'தடையறத் தாக்க', 'எனிமி' உட்பட சில படங்களில் நடித்தார். அவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டதால், திரை உலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்து வந்தார். இருப்பினும் அவ்வப்போது சில படங்களில் தலை காட்டி வந்தார். அவரின் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில், தான் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டி இருந்த காட்சிகள், நயன்தாரா வலியுறுத்தலின் பேரில் நீக்கப்பட்டதாகவும், தன்னுடன் நயன்தாரா நடிக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
குசேலன் படத்தில் மம்தா?
அந்த பேட்டியில், நடிகை மம்தா மோகன்தாஸ், "ரஜினிகாந்த் நடித்த, குசேலன் படத்தில், நானும் நடித்திருந்தேன். ஒரு பாடல் காட்சியிலும் இடம் பிடித்திருந்தேன். அதற்காக 4 நாட்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. ஆனால், படப்பிடிப்பின் போதே, ஏதோ தவறாக இருப்பதாக உணர்தேன். அந்த பாடல் காட்சியில் இருந்து என்னுடைய பகுதிகள் நீக்கப்படும் என உணர்ந்தேன்". "நான் நினைத்தது போலவே, அந்த பாடல் காட்சியில், நான் ஒரு ஷாட்டிலும் இல்லை. பிறகு தான் தெரிந்தது, அந்த நடிகை ஒருவரின் வலியுறுத்தலால் தான் என்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டது என்று," என மம்தா நயன்தாராவை சாடியுள்ளார். குசேலன் படத்தில், நயன்தாரா ஒரு பாடலிலும், சில காட்சிகளிலும் ரஜினியுடன் நடித்திருந்தார். அந்த படத்தில், பசுபதி, மீனா, வடிவேலு ஆகியோரும் நடித்திருந்தனர்.