Loading...
செக் மோசடி வழக்கில் முன்னணி நடிகர் விமலுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

செக் மோசடி வழக்கில் முன்னணி நடிகர் விமலுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 23, 2026
02:16 pm

செய்தி முன்னோட்டம்

'களவாணி', 'மஞ்சப்பை' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விமலுக்கு காசோலை (செக்) மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகர் விமல் 'மன்னர் வகையறா' திரைப்படத்தில் நடித்து, அப்படத்தைத் தயாரித்த போது, படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக பைனான்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ. 4.5 கோடி கடனாக பெற்றிருந்தார். அத்தொகையை திரும்ப செலுத்துவதற்காக விமல் அளித்த காசோலைகள், அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் திரும்பி வந்தன. இதனைத் தொடர்ந்து, பைனான்சியர் கோபி சார்பில் விமல் மீது சென்னை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்குத் தொடரப்பட்டது.

தீர்ப்பு

நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் மேல்முறையீடு

இவ்வழக்கு சென்னை 11-வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வாங்கிய கடனுக்கான தொகையை நடிகர் விமல் திரும்ப வழங்க வேண்டும் என்றும், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் விமல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்காகச் சிறை தண்டனையை ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT