Page Loader
'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி
ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி

'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி

எழுதியவர் Venkatalakshmi V
May 16, 2025
04:20 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தனது கடின உழைப்பால் ஹீரோவாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவர் ஹீரோவாக நடித்த விடுதலை, கருடன் உள்ளிட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'மாமன்' படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையை சூரியே எழுதிய நிலையில், ப்ரசாத் பாண்டியராஜன் இயக்கியுள்ளார். இன்று இந்த படம் வெளியான நிலையில் படத்தின் வெற்றிக்காக சூரி ரசிகர்கள் சிலர் கோவிலில் வேண்டிக் கொண்டு மண் சோறு சாப்பிட்டுள்ளனர். இந்த விஷயம் சூரிக்கு தெரிய வர அவர் மிகவும் கோபமாக பேசியுள்ளார். மாமன் படத்தின் வெற்றியை காண திரையரங்கிற்கு வந்தவரிடம் நிருபர்கள் இது பற்றி கேட்டபோது அவர் இதைக்கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அதிருப்தி

மண்சோறு சாப்பிடுவது முட்டாள்தனமான செயல் என சூரி காட்டம்

ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை பற்றி நிருபர்கள் கேட்டதற்கு,"மாமன் பட வெற்றிக்காக மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது. தம்பிகளா..! இது ரொம்ப முட்டாள் தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் படம் ஓடும். அதைவிடுத்து மண் சோறு சாப்பிட்டால் படம் எப்படி எடுத்திருந்தாலும் ஓடிவிடுமா?" என்றார். "அதற்கு செலவு செய்த பணத்தில் 4 பேருக்கு தண்ணீர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். இதுபோன்ற செயல்களை செய்பவர்கள் எனது ரசிகராகக் கூட இருப்பதற்கு தகுதியற்றவர்கள்" என கோபமாக கூறியுள்ளார். மேலும்,"நான் சாப்பாட்டிற்காக மிகவும் கஷ்டப்பட்டவன். என்னுடைய உழைப்பினாலும், மக்களாலும் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனக்கு சாப்பாட்டின் அருமை தெரியும். நீங்கள் அந்த சாப்பாட்டை அவமானப்படுத்திவிட்டீர்கள்" என்றார்.