LOADING...
ரத்த வாந்தி எடுக்கும் அளவிற்கு சித்திரவதை! செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத ரவி மோகன்
விவாகரத்து வரை நடிக்க மாட்டேன் என நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி

ரத்த வாந்தி எடுக்கும் அளவிற்கு சித்திரவதை! செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத ரவி மோகன்

எழுதியவர் Sekar Chinnappan
May 16, 2026
03:24 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று (மே 16) அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி மோகன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான அவமானங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு கதறினார். தனது மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து நடைமுறைகள் நீதிமன்றத்தில் முழுமையாக முடிவுக்கு வரும் வரையில், தான் இனி எந்தவொரு புதிய திரைப்படங்களிலும் நடிக்கப்போவதில்லை என்று அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னால் நடிக்க இயலவில்லை என்றும், தொடர்ந்து தன் மீது சுமத்தப்படும் தேவையற்ற பழிகளால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். ஒரு முன்னணி நடிகராகத் திரையில் ஜொலித்தவர், இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் தனது மனக் குமுறல்களைக் கொட்டியது ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கெனிஷாவை காலி பண்ணிட்டாங்க

தனக்குக் துணையாக நின்ற தோழி மீதான இணைய அவதூறுகளுக்கு ரவி மோகன் ஆக்ரோஷப் பதிலடி

தனது கடினமான காலகட்டத்தில் தனக்கு ஒரு நல்ல நண்பராகவும், பக்கபலமாகவும் நின்றவர் கெனிஷா என்று குறிப்பிட்ட ரவி மோகன், அவர் மீது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் நடத்திய சைபர் புல்லியிங் தாக்குதல்களுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். "இணையத்தில் அவதூறு கருத்துக்களைப் பரப்பி ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையைக் காலி செய்து அனுப்பிவிட்டீர்கள், அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்" என்று கூறிய அவர், அவதூறுகளைப் பரப்பிய நெட்டிசன்களைத் தான் சும்மா விடப்போவதில்லை என்று எச்சரித்தார். தான் பல அழகான கதாநாயகிகளுடன் நடித்தவன் என்றும், யாருடைய அழகிலும் மயங்கிவிடவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், ஒருவருக்குக் கஷ்டம் வரும் போதுதான் நல்ல நண்பர்கள் யார் என்பது தெரியும் என்பதற்கு கெனிஷாவே சாட்சி என்று உருக்கமாகக் கூறினார்.

பிள்ளைகளைப் பார்க்க முடியாத சோகம்

₹50 லட்சம் பள்ளி கட்டணம் செலுத்தியும் பாடிகார்ட் மூலம் தடுக்கப்படும் தந்தை பாசம்

தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தான் ஆண்டுதோறும் ₹50 லட்சம் வரை பள்ளி கட்டணமாகச் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட ரவி மோகன், ஆனால் அவர்களைத் தன்னை நேரில் பார்க்க விடாமல் ஆர்த்தியின் குடும்பத்தினர் தடுத்து வருவதாகக் கண்ணீருடன் குற்றஞ்சாட்டினார். பிள்ளைகளின் மொபைல் போன்களில் தனது எண் பிளாக் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது கூட பாடிகார்ட்களுடன் அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோவை எப்படியாவது தனது பிள்ளைகள் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர், தான் கட்டிய வீட்டில் அவர்கள் சொகுசாக வாழும் சூழலில், தான் இன்று ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், நினைத்தால் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்ற முடியும் என்றாலும் ஒரு தந்தையாகத் தான் அப்படிச் செய்ய மாட்டேன் என்றும் கூறினார்.

Advertisement

அது ஒரு பிளாக்மெயில் திருமணம்

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கையை அறுத்துக் கொண்டு ஆர்த்தி கல்யாணம் செய்ததாகப் பரபரப்புப் புகார்

ஆர்த்தி உடனான தனது திருமணம் ஒரு பிளாக்மெயில் மேரேஜ் என்று குறிப்பிட்ட ரவி மோகன், ஆர்த்தி தனது கையை அறுத்துக் கொண்டு மிரட்டியதால் தான் இந்தத் திருமணம் நடந்ததாக ஒரு அதிரடி ரகசியத்தை உடைத்தார். இந்தத் திருமணம் வேண்டாம் என்று தனது பெற்றோர் ஆர்த்தியின் குடும்பத்தினர் காலில் விழுந்து கெஞ்சியதாகவும், திருமணத்தின் போது அட்சதை போடும் போதே 'நாசமா போ' என்றுதான் சாபம் இட்டார்கள் என்றும் அவர் கூறினார். தற்போதைய தலைமுறையில் ஆண்களுக்கு நடக்கும் சொல்ல முடியாத அநியாயங்கள் தனக்கும் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தனக்கு ரத்த வாந்தி எடுக்கும் அளவிற்கு மன உழைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிராகப் பிளாக் மேஜிக் போன்ற காரியங்கள் செய்யப்படுவதாகவும் கூறி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Advertisement

யார் அந்த 'மூன்று எழுத்து இட்லி நடிகை'?

மூன்றெழுத்து நடிகை குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எழுப்பும் கேள்விகள்

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் ரவி மோகன் குறிப்பிட்ட மூன்று எழுத்து இட்லி நடிகை என்ற வார்த்தைதான் தற்போது இணையம் முழுவதும் காட்டுத்தீயாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தன் தலைமுறை ஹீரோக்கள் மூன்று பேரின் குடும்பங்களை இதேபோல் கெடுத்த ஒரு நடிகை, தற்போது பெண்ணியவாதி என்ற போர்வையில் தனது வாழ்க்கையையும் கெடுக்கப் பார்ப்பதாக அவர் பெயர் குறிப்பிடாமல் சாடினார். அந்த மூன்றெழுத்து நடிகை யாராக இருக்கும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பல்வேறு ஊகங்கள் கிளம்பியுள்ளன. இந்த ஊகங்கள் ஒரு பக்கம் பரவினாலும், ரவி மோகன் கடைசி வரை அந்த நடிகையின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement