மருத்துவ உலகில் புரட்சி! ஆய்வகத்தில் உருவான செயற்கை செல் 'ஸ்பட்-செல்'! புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்குமா?
செய்தி முன்னோட்டம்
உடல் நலம் மற்றும் மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாக, ஆய்வகத்தில் முற்றிலும் செயற்கையான மூலக்கூறுகளைக் கொண்டு ஒரு புதிய செயற்கை செல்லை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். மினசோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செயற்கை உயிரியலாளர் கேட் அடாமாலா தலைமையிலான குழு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஸ்பட்-செல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை செல், இயற்கையான செல்களைப் போலவே தானாகவே உணவை உறிஞ்சி, வளர்ந்து, தங்களைப் போன்றே புதிய செல்களை உற்பத்தி செய்யும் அசாத்திய திறனைக் கொண்டுள்ளது.
செயற்கை செல்
பூஜ்ஜியத்தில் இருந்து உருவான செயற்கை செல்
ஏற்கனவே இருக்கும் ஒரு செல்லின் மரபணுவை மாற்றி அமைக்கும் தற்போதைய ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் போலல்லாமல், இந்த செயற்கை உயிரியல் தொழில்நுட்பமானது முற்றிலும் உயிர் இல்லாத வேதிப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு புதிய செல்லையே கட்டமைத்துள்ளது. இயற்கையான பாக்டீரியா செல்களில் மில்லியன் கணக்கான மூலக்கூறுகள் இருக்கும் நிலையில், இந்த ஸ்பட்-செல் வெறும் 150 முதல் 200 மூலக்கூறுகளை மட்டுமே கொண்டு இந்த அசாத்திய வளர்ச்சியை எட்டியுள்ளது. இது செயற்கையான உயிர் அல்ல என்றாலும், உயிர் எவ்வாறு மிக அடிப்படையான மட்டத்தில் இயங்குகிறது என்ற கேள்விக்கு விடை காண உதவும் ஒரு முக்கிய ஆராய்ச்சி கருவியாகும்.
மனித ஆரோக்கியம்
மனித ஆரோக்கியத்தில் ஏற்படப்போகும் புரட்சிகர மாற்றங்கள்
இந்த செயற்கை செல்கள் எதிர்காலத்தில் மனித ஆரோக்கியம் மற்றும் மருத்துவத் துறையில் ஒரு தனிப்பயனாக்கப்பட்ட உயிரியல் தொழிற்சாலையாக செயல்படப் போகின்றன என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இதன் மூலம் மனித உடலின் ஆரோக்கியமான செல்களைப் பாதிக்காமல், குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை மட்டுமே துல்லியமாகக் கண்டறிந்து அழிக்கும் இலக்கு நோக்கிய புதிய சிகிச்சைகளை வடிவமைக்க முடியும். மேலும், நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவைப்படும் இன்சுலின் மற்றும் பிற உயிர் காக்கும் மருந்துகளை தற்போதைய முறையை விட பல மடங்கு வேகமாகவும், மலிவாகவும் தயாரிப்பதற்கும் இது வழிவகுக்கும்.
துல்லிய மருத்துவம்
துல்லியமான மருத்துவ முறைகளின் எதிர்காலம்
ஒவ்வொரு மனிதனின் மரபணு அமைப்பிற்கு ஏற்ப, பக்கவிளைவுகள் இல்லாத துல்லியமான மருந்து விநியோக முறைகளை வடிவமைக்கவும், அரிதான மரபணு கோளாறுகளைக் குணப்படுத்தவும் இந்தச் செயற்கை செல்கள் உதவும். தொற்றுநோய் பரவல்களின் போது மிக வேகமான முறையில் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கும், நுண்ணுயிர் எதிர்ப்பை எதிர்த்துப் போராட புதிய ஆன்டிபயாடிக்குகளை உருவாக்குவதற்கும் இது ஒரு தகுந்த தீர்வாக அமையும். விஞ்ஞானிகள் ஏற்கனவே இன்சுலின் தயாரிக்க மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியாக்களை பயன்படுத்தி வரும் வேளையில், இந்தச் செயற்கை செல்கள் அந்த எல்லையை இன்னும் விரிவுபடுத்தும்.
விசித்திர தொழில்நுட்பம்
ஸ்பட்-செல் இயங்கும் விசித்திரமான தொழில்நுட்பம்
இயற்கையான செல்களைப் போல இதற்குள் புரதங்களை உருவாக்கும் சிக்கலான அமைப்புகள் கிடையாது என்பது இதன் தனித்துவமாகும். மாறாக, விஞ்ஞானிகள் இதற்கு உணவளிக்கும் போது ரிபோசோம்கள் எனப்படும் மூலக்கூறு எந்திரங்களை செயற்கையாக உள்ளே செலுத்துிறார்கள். ஆய்வகக் கட்டுப்பாட்டில் இது ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் ஒருமுறை பிரிந்து புதிய செல்களை உருவாக்குகிறது. இ.கோலி போன்ற இயற்கையான பாக்டீரியாக்களை விட இது மெதுவாக செயல்பட்டாலும், ஒரு செயற்கையான செல்லால் இயற்கையைப் போலவே இயங்க முடியும் என்பதற்கான மிக முக்கியமான ஆதாரமாக இது பார்க்கப்படுகிறது.
ஆபத்துகள்
இந்தச் செயற்கை செல்லால் ஆபத்துகள் ஏதேனும் உண்டா
இந்தச் செயற்கை செல்கள் ஆய்வகத்திற்கு வெளியே பரவி ஏதேனும் புதிய ஆபத்துக்களை ஏற்படுத்துமா என்ற அச்சம் தேவையில்லை என விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர். ஏனெனில், ஸ்பட்-செல் உயிர் வாழ ஆய்வகத்தில் வழங்கப்படும் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களும், எந்திரங்களும் அத்தியாவசியத் தேவையாகும். இதனால் தனியாக இயற்கைச் சூழலில் உயிர் பிழைக்க முடியாது என்பதால் தற்காலிகப் பரவல்களுக்கு வாய்ப்பே இல்லை. இருப்பினும், இந்தத் தொழில்நுட்பம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளரும் போது சர்வதேச பாதுகாப்பு விதிகளும், நெறிமுறைகளும் மிக முக்கியம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.