இபிஎஃப் திட்டம் 2026 அறிமுகம்: ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் மாறிய புதிய விதிகள்! முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய இபிஎஃப் திட்டம் 2026, ஊழியர்களுக்குக் கிடைக்கும் முக்கியப் பலன்களைக் குறைக்காமல், பிஎஃப் நிர்வாக முறையை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட மாற்றத்தால் ஏற்கனவே இருக்கும் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. பழைய திட்டத்தில் இருந்த அனைத்து ஊழியர்களும், அவர்களின் கணக்கு நிலுவை மற்றும் சேமிப்புகளுடன் தானாகவே இந்த புதிய இபிஎஃப் திட்டம் 2026 இன் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.
மினிமம் பேலன்ஸ்
பகுதிப் பணம் எடுப்பதில் வந்துள்ள புதிய 'மினிமம் பேலன்ஸ்' விதி
இந்த புதிய திட்டத்தில் ஊழியர்களைப் பாதிக்கும் மிக முக்கியமான மாற்றம் பகுதிப் பணம் எடுக்கும் விதிகளில் தான் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் அவசரத் தேவைகளுக்காகப் பிஎஃப் பணத்தை எடுக்கும் போது, கணக்கில் இருக்கும் மொத்தத் தொகையில் 25 சதவீதத்தைக் குறைந்தபட்ச இருப்பாக எப்போதும் வைத்திருக்க வேண்டும். எஞ்சிய 75 சதவீதத் தொகையை மட்டுமே ஊழியர்கள் எடுக்க முடியும். உதாரணமாக, உங்கள் கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருந்தால், 25,000 ரூபாயைக் கணக்கிலேயே வைத்திருக்க வேண்டும், 75,000 ரூபாயை மட்டுமே எடுக்க முடியும்.
கட்டுப்பாடுகள்
பணம் எடுப்பதற்கான 6 முக்கியக் காரணங்களும் கட்டுப்பாடுகளும்
புதிய விதியின்படி, மருத்துவம், கல்வி, திருமணம், வீட்டு வசதி (வீடு அல்லது மனை வாங்குதல், பழுது பார்த்தல்), அவசர சூழல்கள் மற்றும் வேலை இழந்த நிலை ஆகிய 6 முக்கியக் காரணங்களுக்காகப் பகுதிப் பணம் எடுக்க அனுமதி அளிக்கப்படும். ஆனால், கல்விக்காக வாழ்நாளில் அதிகபட்சமாக 10 முறையும், திருமணம் மற்றும் வீட்டு வசதிக்காக தலா 5 முறைகளும் மட்டுமே பகுதிப் பணம் எடுக்க முடியும். வேலை இழந்த ஊழியர்கள் 12 மாத காலத்திற்குள் இருந்தால், ஒரு நிதியாண்டில் 2 முறை மட்டுமே தங்களின் தகுதியான தொகையை எடுக்க அனுமதி உண்டு.
பங்களிப்பு விகிதங்கள்
மாறாமல் இருக்கும் பிஎஃப் பங்களிப்பு விகிதங்கள்
புதிய சட்டத்தில் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் மாதாந்திர பிஎஃப் பங்களிப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவனத்தின் சார்பில் 12 சதவீதமும் தொடர்ந்து பிடித்தம் செய்யப்படும். குறிப்பிட்ட சில சிறு நிறுவனங்களுக்கு மட்டும் 10 சதவீத விதி நீடிக்கும். அதேபோல, ஊழியர்கள் தங்களின் விருப்பத்தின் பேரில் கூடுதல் தொகையைச் சேமிக்கும் விபிஎஃப் முறையும், மத்திய அரசு நிர்ணயித்துள்ள சட்டப்பூர்வ சம்பள உச்சவரம்பும் மாறாமல் அப்படியே தொடர்கிறது.
அரசுக்கான அதிகாரம்
அவசரக் காலங்களில் அரசுக்குக் கிடைத்துள்ள புதிய அதிகாரம்
புதிய இபிஎஃப் 2026 திட்டத்தின் மூலம், ஏதேனும் பெருந்தொற்று நோய்கள், தேசிய பேரிடர்கள் அல்லது அவசரக் காலங்கள் ஏற்படும் சூழலில், நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்புத் தொகையைக் தற்காலிகமாகக் குறைப்பதற்கோ அல்லது 3 மாதங்கள் வரை ஒத்திவைப்பதற்கோ மத்திய அரசுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற இக்கட்டான காலங்களில் நலிவடைந்த நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் நிதியாதாரத்தை உறுதி செய்ய இந்த விதி உதவும்.
யுஏஎன் எண்
நிரந்தர அடையாளமாகத் தொடரும் யுஏஎன் எண்
ஊழியர்களின் கணக்குகளை எளிதாக நிர்வகிக்க உதவும் 'யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்' (UAN) தொடர்ந்து நிரந்தர அடையாள எண்களாகவே நீடிக்கும். ஒரு ஊழியர் வேலை மாறினாலும் இந்த எண் மாறாது என்பதால், பிஎஃப் கணக்குகளை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும், புதிய விதிகளின்படி பிஎஃப் கணக்குகளை டிஜிட்டல் முறையில் சரிபார்க்க ஆதார், பான் கார்டு மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்களைக் கொடுப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தனியார் டிரஸ்ட்
தனியார் பிஎஃப் டிரஸ்ட்டுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்
சொந்தமாகப் பிஎஃப் டிரஸ்ட் (Exempted PF Trusts) நடத்தும் பெரு நிறுவனங்களுக்கு இந்த புதிய திட்டம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி அவர்கள் அனைத்து ஊழியர்களின் கணக்கு விவரங்களையும் ஆன்லைனில் மட்டுமே பராமரிக்க வேண்டும், மின்னணு முறையில் ஆண்டு அறிக்கைகளை வழங்க வேண்டும் மற்றும் கோரிக்கைகளை டிஜிட்டல் முறையில் மட்டுமே தீர்க்க வேண்டும். மேலும், புதிய 'இபிஎஸ் 2026' (Employees' Pension Scheme 2026) விதியின் கீழ் ஓய்வூதியக் கணக்கீட்டு ஃபார்முலாவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.