60 சவரன் இல்லையாம், இப்போது 200 ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதித்துள்ள புதிய புகார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை போன விவகாரத்தில், தினம் ஒரு திருப்பம் நிகழ்கிறது. முதலில், 60 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளும், வைர நகைகளும், விலைமதிப்பில்லாத கற்களும் திருடப்பட்டதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார். அதில் அவரது வீட்டில் இருக்கும் பணியாட்கள் மேல் சந்தேகம் இருப்பதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்ததை அடுத்து, வீட்டில் இருப்பவர்களிடம் இருந்து விசாரணையை துவக்கிய போலீசார், ஈஸ்வரி என்ற பெண்ணை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, டிரைவர் வெங்கடேசன் என்பவரையும் கைது செய்தனர். ஐஸ்வர்யா, தனது நகைகளை வைத்திருக்கும் லாக்கரின் சாவி இருக்கும் இடம், இவர்களுக்கு மட்டும்தான் தெரியும் எனவும் ஐஸ்வர்யா புகாரில் தெரிவித்திருந்தார். விசாரணையின் இறுதியில், 100சவரன் நகைகள், ஈஸ்வரியிடம் இருந்தும், வெங்கடேசனிடம் இருந்தும் மீட்கப்பட்டது.
200 சவரன் நகை திருட்டு?
புகாரில் தெரிவிக்கப்பட்டதை விட, அதிக நகைகள் மீட்கப்படவே, குழம்பிய போலீசார், ஈஸ்வரி, தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் வீட்டிலும் தனது கைவரிசையை காட்டி இருக்கலாம் என சந்தேகப்பட்டது. அதனால், ஐஸ்வர்யாவிடம் இது குறித்து மீண்டும் விசாரித்த போலீசார், அவரை மீண்டும் ஒருமுறை தனது காணாமல் போன நகைகளின் மதிப்பை சரி பார்த்து தரும்படி கோரினர். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா, தனது நகையின் மதிப்பை முழுவதுமாக ஆராய்ந்து, தற்போது மீண்டும் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில், 200 சவரன் நகைகள் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஈஸ்வரியையும், வெங்கடேசனையும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர், சென்னை காவல்துறை. அவர்களிடம் இருந்து தற்போது வரை, 150 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் செய்திகள் தெரிவிக்கின்றது.