கர்நாடக சிறையில் நடிகருக்கு விஐபி அந்தஸ்து; 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா காவலில் இருந்தபோது அவர் விஐபி போல் நடத்தப்பட்டதைக் காட்டும் வைரலான புகைப்படம் மற்றும் வீடியோ மீதான விசாரணையைத் தொடர்ந்து பெங்களூர் சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் கூறுகையில், "போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் தொடர்புடைய 7 அதிகாரிகளை கண்டறிந்து, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம். இது கடுமையான பாதுகாப்பு குறைபாடு" என்று கூறினார். ரேணுகாசாமி கொலை வழக்கில் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ள தர்ஷனின் புகைப்படம் இணையத்தில் வெளியானதால் சர்ச்சை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தர்ஷனின் வைரலாக புகைப்படம்
சிறையிலிருந்து கசிந்த ஒரு படத்தில், நடிகர் நிதானமான ஒரு போஸில், நாற்காலியில் அமர்ந்து, சிகரெட் மற்றும் காபி கோப்பையை பிடித்துக் கொண்டு, மற்ற மூன்று நபர்களுடன் பேசிக்கொண்டு இருப்பதைக் காட்டுகிறது. சில தகவல்களின்படி, தர்ஷனுடன் காணப்பட்டவர்கள் வில்சன் நாகா, நடிகரின் மேலாளரும் சக குற்றவாளியுமான நாகராஜ் மற்றும் மற்றொரு கைதியான குல்லா சீனா ஆகியோர் எனக் கூறப்படுகிறது. மேலும், தர்ஷன் ஒருவரிடம் வீடியோ கால் மூலம் பேசியதாகக் கூறப்படும் வீடியோவும் பரப்பப்பட்டது. இந்த சம்பவம் பரவலான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. தர்ஷனுக்கு சிறையில் விஐபி அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கில் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உள்ளிட்ட 16 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.