திரையுலகில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த இமான்
கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான். இவர் இசைத்துறையில் கால்பதித்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இமான், அந்நாளில் பிரபலமாக இருந்த மியூசிக் டைரக்டர் ஆதித்யனிடம், பியானோ, கிபோர்டு பிளேயராக பணியாற்றினார். அவரின் திறமையை கண்ட நடிகை குட்டி பத்மினி, தன்னுடைய சீரியல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை அளித்தார். அப்படி முதலில் அவர் இசையமைத்த TV சீரியல், 'கிருஷ்ணதாசி'. அதன் பின்னர், கோலங்கள், மந்திர வாசல், போன்ற பிரபல சீரியல்களுக்கு டைட்டில் பாடல், பின்னணி இசை போன்றவை இசையமைத்து வந்தார். அதன் பின்னர் காதலே சுவாசம் என்ற குட்டி பத்மினி தயாரிக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்கும் படத்திற்கு இசையமைத்து வந்தபோது தான், 'தமிழன்' படவாய்ப்பு கிடைத்தது.
தேசிய விருது வென்ற இமான்
அதன் பின்னர், விசில்,கிரி, போன்ற படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். எனினும், சிறிது காலம் இறங்குமுகத்தில் இருந்த இவரின் திரைப்பட வாழ்க்கையை மீண்டும் உச்சிக்கு எடுத்து சென்றது, பிரபு சாலமன் படங்களான மைனா மற்றும் கும்கி ஆகியவை. இந்த படங்களின் அனைத்து பாடல்களும் தற்போது வரை ரசிக்க வைக்கின்றன. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்த இமான், இதற்காக பல விருதுகளை பெற்றார். இதனிடையே தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்த இமான், இரு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார். 'விஸ்வாசம்' படத்தில் அவர் இயற்றியிருந்த 'கண்ணான கண்ணே' பாடலுக்கும் 2021-ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றார்.