உணவு விநியோகத்துடன, லாஜிஸ்டிக்ஸ் சேவைகளையும் வழங்கத் தொடங்கிய ஸோமாட்டோ
உணவு விநியோக வணிகத்தைத் தொடர்ந்து லாஜிஸ்டிக்ஸ் சேவைகளையும் வழங்கத் தொடங்கியிருக்கிறது ஸோமாட்டோ நிறுவனம். ஏற்கனவே இந்தியாவில் தாங்கள் கொண்டிருக்கும் 3 லட்சம் உணவு டெலிவரி பார்ட்னர்களை, இந்த லாஜிஸ்டிக்ஸ் சேவைக்கும் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். எக்ஸ்ட்ரீம் என்ற பெயரில் புதிய ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்குவதற்காக பிரத்தியேகமாக வெளியிட்டிருக்கிறது ஸோமாட்டோ. 10 கிலோ வரையிலான பொருட்கள் நகருக்குள்ளேயும், நகருக்கும் வெளியேயும் விநியோகிக்க வணிகர்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே இதே போன்ற லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்கி வரும் லோடுஷேர், டன்சோ ஃபார் பிஸ்னஸ், வீஃபாஸ்ட் மற்றும் புளோஹார்ன் உள்ளிட்ட சேவைகளுக்குப் போட்டிாக இந்த எக்ஸ்ட்ரீம் லாஜிஸ்டிக்ஸ் சேவையைத் தொடங்கியிருக்கிறது ஸோமாட்டோ.
எக்ஸ்ட்ரீம் பை ஸோமாட்டோ:
2008ம் ஆண்டு இந்தியாவில் உணவு விநியோக சேவை நிறுவனமான தொடங்கப்பட்ட ஸோமாட்டோ, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தான் முதல் முறையாக லாபத்தைப் பதிவு செய்திருந்தது. ரூ.2,416 கோடி வருவாயுடன், மிக சொற்ப அளவாக ரூ.2 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது ஸோமாட்டோ. தற்போது தங்களுடைய வருவாய் மற்றும் லாபத்தைப் பெருக்க இந்தப் புதிய லாஜிஸ்டிக்ஸ் சேவையைத் தொடங்கியிருக்கிறது ஸோமாட்டோ. உணவு டெலிவரியைப் போலவே, இந்த லாஜிஸ்டிக்ஸ் சேவையிலும் லைவ் டிராக்கிங் வசதிகளை அளிக்கவிருக்கிறது அந்நிறுவனம். 10 கிலோ எடை வரையிலான பார்சல்களை இந்த லாஜிஸ்டிக்ஸ் சேவை மூலம் டெலிவரி செய்யவிருக்கிறது ஸோமாட்டோ. மேலும், ரூ.35 விலையிலிருந்து தங்களுடைய சேவைகளை அளிக்கத் தொடங்கியிருக்கிறது.