LOADING...
சர்ச்சையில் சிக்கிய உலகப் பொருளாதார மன்றம்! ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பால் தலைவர் போர்ஜ் ப்ரெண்டே பதவி விலகல்
எப்ஸ்டீன் சர்ச்சையை அடுத்து உலகப் பொருளாதார மன்றத் தலைவர் போர்ஜ் ப்ரெண்டே ராஜினாமா

சர்ச்சையில் சிக்கிய உலகப் பொருளாதார மன்றம்! ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பால் தலைவர் போர்ஜ் ப்ரெண்டே பதவி விலகல்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 26, 2026
05:25 pm

செய்தி முன்னோட்டம்

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான போர்ஜ் ப்ரெண்டே, இன்று (பிப்ரவரி 26, 2026) தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடனான அவரது கடந்த காலத் தொடர்புகள் குறித்துத் தனிப்பட்ட விசாரணை தொடங்கப்பட்ட சில வாரங்களிலேயே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் இந்த உயரிய பொறுப்பில் இருந்த ப்ரெண்டே, மன்றத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை

எப்ஸ்டீன் விவகாரமும் விசாரணையும்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட தகவல்களின்படி, போர்ஜ் ப்ரெண்டே கடந்த காலங்களில் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் மூன்று முறை வணிக ரீதியான இரவு விருந்துகளில் கலந்து கொண்டதும், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் அவருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உலகப் பொருளாதார மன்றம் இது குறித்து ஒரு சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த விசாரணையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ப்ரெண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

விளக்கம்

போர்ஜ் ப்ரெண்டேவின் விளக்கம்

தனது பதவி விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள போர்ஜ் ப்ரெண்டே, "கடந்த 8.5 ஆண்டுகளாக இந்த அமைப்பில் பணியாற்றியது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. உலகப் பொருளாதார மன்றம் தனது முக்கியமான பணிகளை எந்தவித இடையூறுமின்றித் தொடர வேண்டும் என்பதற்காகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்." என்று தெரிவித்துள்ளார். எனினும், தனது அறிக்கையில் எப்ஸ்டீன் குறித்த எந்த நேரடித் தகவலையும் அவர் குறிப்பிடவில்லை. நார்வே நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய இவர், உலகத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

Advertisement

இடைக்காலத் தலைமை

இடைக்காலத் தலைமை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள்

மன்றத்தின் இணைத் தலைவர்களான ஆண்ட்ரே ஹாஃப்மேன் மற்றும் லாரி ஃபிங்க் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியில், அலோயிஸ் ஸ்விங்கி உடனடியாக இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளனர். ப்ரெண்டே மற்றும் எப்ஸ்டீன் இடையிலான தொடர்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏற்கனவே பொதுவெளியில் வெளியான தகவல்களைத் தவிர வேறு எந்தக் கூடுதல் புகார்களும் கண்டறியப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். டாவோஸ் மாநாட்டை நடத்தும் புகழ்பெற்ற இந்த அமைப்பின் புதிய நிரந்தரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

Advertisement