இன்சூரன்ஸ் க்ளைம் நிராகரிப்பு செல்லாது! மருத்துவமனை விதிமீறலுக்குப் பாலிசிதாரர் பொறுப்பல்ல; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 63 வயதான இந்திரதத் பாண்டியா என்பவர், தான் எடுத்த மெடிக்கிளைம் பாலிசி நிராகரிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. மருத்துவமனை விதிகளைப் பின்பற்றத் தவறியதற்காகப் பாலிசிதாரரைத் தண்டிக்கக் கூடாது என்றும், அவரது மருத்துவச் செலவுக்கான தொகையை இழப்பீட்டுடன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வதோதரா மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு, இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தேவையற்ற தொழில்நுட்பக் காரணங்களால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.
வழக்கின் பின்னணி
20 வருடப் பாலிசியும் நிராகரிப்பும்
இந்திரதத் பாண்டியா கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் உடல்நலக் காப்பீட்டுப் பாலிசியை வைத்திருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதற்காக ஆன 44,700 ரூபாய் செலவை க்ளைம் செய்தார். ஆனால், அந்த மருத்துவமனை வதோதரா மாநகராட்சி விதிகளின்படி பதிவு செய்யப்படவில்லை என்றும், அங்கு 10 படுக்கை வசதிகள் இல்லை என்றும் கூறி இன்சூரன்ஸ் நிறுவனம் அவரது க்ளைமை நிராகரித்தது. இதனை எதிர்த்து பாண்டியா 2023 ஆம் ஆண்டு நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.
நீதிமன்றம்
நீதிமன்றம் முன்வைத்த வலுவான வாதங்கள்
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாதங்களை ஏற்க மறுத்துவிட்டது. இன்சூரன்ஸ் ஒப்பந்தம் என்பது நிறுவனத்திற்கும் பாலிசிதாரருக்கும் இடையிலானது என்றும், மருத்துவமனை உள்ளூர் மாநகராட்சி விதிகளைப் பின்பற்றுகிறதா இல்லையா என்பது மருத்துவமனைக்கும் மாநகராட்சிக்கும் இடையிலான பிரச்சினை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. தகுதியான மருத்துவரால் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், மருத்துவமனையின் நிர்வாகக் குறைபாடுகளைக் காரணம் காட்டி ஒரு நோயாளியின் க்ளைமை நிராகரிப்பது நியாயமற்றது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவமனை பதிவு செய்யப்படவில்லை என்பதால் நோயாளி எடுத்துக்கொண்ட சிகிச்சை சட்டவிரோதமானதாக மாறிவிடாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இழப்பீடு
இழப்பீட்டுடன் க்ளைம் வழங்க உத்தரவு
இறுதியாக, இந்திரதத் பாண்டியாவுக்குச் சேர வேண்டிய 44,700 ரூபாய் க்ளைம் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தவிர, அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 2,000 ரூபாயும், வழக்குச் செலவிற்காக 1,000 ரூபாயும் கூடுதலாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. ஒரு காப்பீட்டுப் பாலிசியின் முக்கிய நோக்கமே அவசர மருத்துவக் காலங்களில் நிதி உதவி அளிப்பதுதான். அதைத் தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி மறுப்பது காப்பீட்டுச் சேவையின் நோக்கத்தையே சிதைப்பதாகும் என்று நுகர்வோர் ஆணையம் தனது தீர்ப்பில் மிகத்தெளிவாகப் பதிவு செய்துள்ளது.