LOADING...
அமெரிக்காவின் உலகளாவிய 15 சதவீத இறக்குமதி வரி இந்த வாரத்தில் அமல்?
ந்த வரி உயர்வு இன்னும் சில நாட்களில் நடைமுறைக்கு வரும்

அமெரிக்காவின் உலகளாவிய 15 சதவீத இறக்குமதி வரி இந்த வாரத்தில் அமல்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 05, 2026
07:55 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள உலகளாவிய தற்காலிக இறக்குமதி வரி விரைவில் 15 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட், இந்த வரி உயர்வு இன்னும் சில நாட்களில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம், சர்வதேச அவசரக்கால பொருளாதார அதிகார சட்டத்தின் (IEEPA) கீழ் அதிபர் வரிகளை விதிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது. இந்த சட்ட பின்னடைவை தொடர்ந்து, 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ஐ பயன்படுத்தி புதிய வரி விதிப்புகளை ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, தற்போது அமலில் உள்ள 10 சதவீத வரியானது 15 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

பழைய நிலை

ஐந்து மாதங்களில் பழைய நிலை

CNBC ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பெசன்ட் கூறுகையில்,"அடுத்த சில நாட்களில் இந்த 15 சதவீத வரி உயர்வு அமலுக்கு வரும். அடுத்த ஐந்து மாதங்களுக்குள் அனைத்து இறக்குமதி வரிகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என நான் உறுதியாக நம்புகிறேன்," என்று தெரிவித்தார். மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நிரந்தர வரிகளை விதிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம்(USTR) மற்றும் வர்த்தகத் துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய வர்த்தகச் சந்தையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement