வைப்புத்தொகைக்கான காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு வங்கி வைப்புத் தொகைக்கான தற்போதைய ₹5 லட்சம் காப்பீட்டு வரம்பை உயர்த்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று (பிப்ரவரி 17) உறுதிப்படுத்தினார்.
நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மோசடி உள்ளிட்ட சமீபத்திய வங்கி மோசடிகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயலாளர் எம். நாகராஜு இதுகுறித்து கூறுகையில், இந்த திட்டம் மதிப்பாய்வில் உள்ளது என்றும், ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (DICGC) வங்கி வைப்புத்தொகைகளுக்கு காப்பீட்டை வழங்குகிறது.
கடந்த காலங்களில் முதன்மையாக கூட்டுறவு வங்கிகளுக்கான கோரிக்கைகளை இது தீர்த்து வைத்துள்ளது.
முந்தைய உயர்வு
கடந்த கால காப்பீட்டுத் தொகை உயர்வு
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நெருக்கடியைத் தொடர்ந்து காப்பீட்டு வரம்பு கடைசியாக 2020 இல் ₹1 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கீழ் கூட்டுறவு வங்கித் துறை நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகார செயலாளர் அஜய் சேத் தெரிவித்தார்.
ஒரு வங்கியில் உள்ள சிக்கல்கள் முழுத் துறையிலும் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
நிதி முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஒழுங்குமுறை அமைப்புகள் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்.
நியூ இந்தியா கூட்டுறவு வங்கி
நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மோசடியில் விபரம்
நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி, ஒரு ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் கணக்குகளில் ₹122 கோடி முரண்பாடு இருப்பது தெரியவந்தது.
அந்த வங்கியின் நிதித்துறை பொது மேலாளரான ஹிதேஷ் மேத்தா, நிதியில் கணிசமான பகுதியை தவறாகப் பயன்படுத்தி, உள்ளூர் கட்டுமான நிறுவனத்திற்கு கொடுத்ததாகக் கூறப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இதனால் வங்கியின் செயல்பாடுகள் ஆர்பிஐயால் முடக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் எந்த வரவு செலவும் மேற்கொள்ள முடியாது.
எனினும், DICGC காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வங்கியின் 1.3 லட்சம் வாடிக்கையாளர்களில் 90 சதவீதம் பேர் தங்கள் முழு சேமிப்பையும் பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.