'X' எனப் பெயர் மாற்றம், தன்னுடைய மதிப்பை இழக்கிறதா ட்விட்டர்?
வணிக நிறுவனங்கள் நீண்ட காலமாக தாங்கள் கொண்டிருக்கும் பிராண்டின் பெயரை மாற்ற மாட்டார்கள். இது வெறும் பெயர் மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பிராண்டின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் தான். ஆனால், நேற்றும் திடீரென ட்விட்டர் தளத்தின் பெயரை 'X' என மாற்றியிருக்கிறார் எலான் மஸ்க். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று 'X' என்ற பெயரின் மீது எலான் மஸ்க்குக்கு ஒரு விருப்பம் இருக்கிறது, தன்னுடைய பல நிறுவனங்களில் இந்த X என்ற எழுத்தை அதிகளவில் பயன்படுத்தியிருக்கிறார் அவர். மற்றொரு காரணம், ட்விட்டர் என்ற பெயரானது சமூக வலைத்தளம் என்ற பிம்பத்தை பயனாளர்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. எலான் மஸ்க் கொண்டிருக்கும் திட்டத்திற்கு பிம்பம் தடையாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம்.
மதிப்பிழக்கிறதா ட்விட்டர்?
கடந்த ஆண்டு அக்டோபரில் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய போதே, அந்நிறுவனத்தின் மதிப்பு சற்று குறைந்தது. தற்போது அதன் பெயரை மாற்றியதிலிருந்து, ட்விட்டர் பிராண்டு மதிப்பானது 20 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 4 பில்லின் டாலர்களாக குறைந்திருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். X என்ற இந்த புதிய பிராண்டை இனி அடிமட்டத்திலிருந்து அவர் கட்டியெழுப்ப வேண்டியிருக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். நிதி சார்ந்த பார்வையிலிருந்து பார்க்கும்போது இந்தப் பெயர் மாற்றம் எலான் மஸ்க்கின் நிறுவனத்திற்கு ஒரு பின்னடைவு தான். ஆனால், அவர் இதனை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார். 'ட்விட்டர்' என்ற பிராண்டை இடித்துத் தள்ளிவிட்டு, 'X' என்ற பிராண்டை, 'எலான் மஸ்க்' என்ற பிராண்டைக் கொண்டு கட்டியெழுப்பத் திட்டமிட்டிருக்கிறார் அவர்.