LOADING...
"நாங்கள் சேவகர்கள் அல்ல.. சமமாக நடத்துங்கள்!": டிரம்ப்-க்கு ராகுல் காந்தி காட்டமான பதிலடி
வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ராகுல் காந்தி

"நாங்கள் சேவகர்கள் அல்ல.. சமமாக நடத்துங்கள்!": டிரம்ப்-க்கு ராகுல் காந்தி காட்டமான பதிலடி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2026
04:03 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி,"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிடம் ஒரு கூட்டாளியாக பேச வேண்டுமே தவிர, எஜமானர் தனது சேவகர்களிடம் பேசுவது போலப் பேசக்கூடாது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலன்களை நாங்கள் எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நமது தேசத்தின் கௌரவத்தையும், இறையாண்மையையும் பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்யப்படாது" என்று ஆவேசமாகப் பேசினார்.

பதிலடி

மத்திய அரசின் பதிலடி

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உடனடியாகப் பதிலடி கொடுத்தார். "ராகுல் காந்தி ஆதாரமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அவர் பேசுகிறார். இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பரஸ்பர லாபம் தரக்கூடியது. எங்களைச் சேவகர்கள் என்று சொல்வது இந்திய மக்களை அவமதிப்பதாகும்" என்று அவர் சாடினார்.

பின்னணி

சர்ச்சையின் பின்னணி

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி கொள்ளும் என்ற நிபந்தனையின் பேரில், இந்திய பொருட்கள் மீதான 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா நீக்கியிருந்தது. இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட வாசகங்கள் மற்றும் இந்தியாவின் விவசாய பொருட்கள் மீதான வரி குறைப்பு ஆகியவை எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவாதத்தால் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சபை அமளியில் ஆழ்ந்தது.

Advertisement