டிரம்பின் அடுத்த அதிரடி! 10லிருந்து 15 சதவீதமாக உயர்ந்தது அமெரிக்க இறக்குமதி வரி! முழு விபரம் இதோ
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) அறிவித்துள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் ஏற்கனவே விதித்திருந்த வரிகளை சட்டவிரோதம் என அறிவித்த மறுநாளே, அவர் இந்த புதிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். அமெரிக்காவை மீண்டும் மிகச்சிறந்த நாடாக மாற்றுவோம் என்ற இலக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தீர்ப்பு
உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் டிரம்பின் பதிலடியும்
அமெரிக்க அதிபரின் அவசர கால பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட வரிகள் செல்லாது என உச்ச நீதிமன்றம் 6-3 என்ற கணக்கில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை தவறானது என்று விமர்சித்த டிரம்ப், 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122 ஐப் பயன்படுத்தி இந்த புதிய 15% வரியை விதித்துள்ளார். இந்த வரி உயர்வு தற்காலிகமானது மற்றும் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதை நீட்டிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும்.
தாக்கம்
இந்தியாவிற்கு ஏற்படும் தாக்கம்
இந்த புதிய 15% வரி உயர்வு இந்திய ஏற்றுமதியாளர்களையும் நேரடியாகப் பாதிக்கும். வெள்ளை மாளிகை வட்டாரங்களின்படி, புதிய வரி விதிமுறை அமலுக்கு வரும் வரை இந்தியா இந்த 15% வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். ஜவுளி, ஆடை, தோல் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களுக்கு இது சவாலாக இருக்கும். மருந்துப் பொருட்கள், வைரங்கள் மற்றும் விமான உதிரிபாகங்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
வர்த்தக ஒப்பந்தம்
இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்
பிப்ரவரி 7, 2026 அன்று இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன் கீழ் இந்தியா அமெரிக்காவின் விவசாயப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் மீதான வரியைக் குறைத்தது. பதிலுக்கு அமெரிக்காவும் இந்தியப் பொருட்கள் மீதான வரியை 18% ஆகக் குறைக்க ஒப்புக்கொண்டது. இருப்பினும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15% உலகளாவிய வரி உயர்வு, இந்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நகர்வுகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வர்த்தக அமைச்சகம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தீவிரமாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்திய ஏற்றுமதிகள் மற்றும் ரூபாய் மதிப்பின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க, ஜவுளி மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் ஏற்றுமதியை மற்ற நாடுகளுக்குப் பரவலாக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.