வாடிக்கையாளர்களை கவர விதிமீறலா? வோடாபோன் ஐடியா மீது ஜியோ, ஏர்டெல் பரபரப்பு புகார்; டிராய் விசாரணை
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், போட்டியாளரான வோடாபோன் ஐடியா மீது வாடிக்கையாளர்களைத் தவறான வழியில் தங்கள் நெட்வொர்க்கிற்கு மாற்ற முற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ள புகார்களை தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிராய் தலைவர் ஏ.கே.லாஹோட்டி திங்கட்கிழமை (செப்டம்பர் 14) தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற செல்லுலார் டிரேடர்ஸ் அசோசியேஷன் நிகழ்வின் போது அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
சலுகைகள்
போர்ட்டிங் சலுகைகள் மூலம் விதிமீறல் குற்றச்சாட்டு
பிற நெட்வொர்க்குகளில் இருந்து தனது வோடாபோன் ஐடியா நெட்வொர்க்கிற்கு மாறும் (MNP) வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக கட்டண சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை நிறுவனம் வழங்கி விளம்பரம் செய்து வருவதாக ஜியோ மற்றும் ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளன.
ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்லது பிற நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இதுபோன்ற சலுகைகளை வழங்குவது டிராய் விதிகளுக்கு எதிரானது என்றும், இது சந்தையில் ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்குகிறது என்றும் புகார் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோரிக்கை
விளம்பரங்களைத் திரும்பப் பெற டிராயிடம் கோரிக்கை
வோடாபோன் ஐடியா நிறுவனம் இத்தகைய விளம்பர பிரச்சாரங்களை உடனடியாக நிறுத்துவதற்கும், விதிகளை மீறி வெளியிடப்பட்ட சலுகைகளை திரும்ப பெறுவதற்கும் டிராய் உத்தரவிட வேண்டும் எனப் புகாரளித்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய டிராய் தலைவர் ஏ.கே.லாஹோட்டி, "நிறுவனங்களிடம் இருந்து புகார்கள் வரும்போது அவற்றை நாங்கள் முறையாகப் பரிசீலிப்போம்.
இந்த விவகாரத்திலும் வந்துள்ள கோரிக்கைகளை ஆய்வு செய்து வருகிறோம்." என்று கூறினார்.
இருப்பினும், மூன்று நிறுவனங்களின் அதிகாரிகளையும் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.
விளக்கம்
வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் விளக்கம்
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எங்களது நிறுவனம் எப்போதும் நியாயமான போட்டியை நம்புகிறது.
எங்களது தயாரிப்புகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் மதிப்பின் அடிப்படையிலேயே செயல்படுகிறோம்.
எந்த சூழலிலும் நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் டிராய் விதிகளுக்கு உட்பட்டே எங்களது வணிக நடைமுறைகள் அமைகின்றன." என்று விளக்கமளித்துள்ளார்.
இந்த மோதல் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.