தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது ரூ.35 கோடி அபராதம் விதித்த TRAI அமைப்பு
பயனர்களின் மொபைலுக்கு வரும் ஸ்பேம் கால் மற்றும் குறுஞ்செய்திகளைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மீது ஒட்டுமொத்தமாக ரூ.34.99 கோடி வரை அபராதம் விதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய். இது குறித்து மாநிலங்களவைக்கு அனுப்பிய கடிதத்தில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கடமையை நிறைவேற்றத் தவறியிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ். பதிவு செய்யப்பட்ட சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் வணிக நோக்கத்துடன் அனுப்பப்படும் கால்கள் மற்றும் குறுஞ்செய்திகளை தடுக்கத் தவறியதற்காக அந்நிறுவனஙகள் மீது மொத்தமாக ரூ.35 கோடி அபராதம் விதித்திருப்பதாக, தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அஷ்வின் வைஷ்னவ்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நடவடிக்கை:
Telecom Commercial Communication Customers Preference Regulation-ஐ மீறயதாகக் கூறி 2021-ம் ஆண்டில் 15,382 இணைப்புகளையும், 2022-ம் ஆண்டு 32,032 இணைப்புகளையும் முடக்கியிருக்கின்றன தொலைத்தொடர்பு நிறுவனங்கள். எனினும், இந்த நடவடிக்கைகள் போதாது எனத் தெரிவித்திருக்கும் ட்ராய், ஸ்பேம் கால்கள் மற்றும் குறுஞ்செய்திகளைத் தடுக்க இன்னும் கண்டிப்பான நடவடிக்கைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கையாள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது. மேலும், வணிக ரீதியிலான குறுஞ்செய்திகள் மற்றும் கால்களை தங்கள் பெற வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை பயனர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அமல்படுத்துவதற்காக, அடுத்த இரண்டு மாதங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்களே தங்களுக்குள் ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் எனவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது ட்ராய்.