
அமெரிக்க வரி இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி: முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்த 50% வரி மிகப்பெரிய எச்சரிக்கை மணி என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை தொடரும் இந்தியாவுக்கு எதிராக, 25+25 = 50% அபராத வரிகளை விதித்து, அவை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த ராஜன், "வர்த்தகம், நிதி, முதலீடு இப்போது ஆயுதங்களாக மாறியுள்ளன. இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது" என்று எச்சரித்தார்.
சார்பு
"ஒரே நாடு சார்பு இந்தியாவுக்கு ஆபத்து"
ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து அவர் கூறும்போது, "இந்த கொள்முதல் யாருக்கு நன்மை தருகிறது, யாருக்கு தீங்கு விளைவிக்கிறது என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான கேள்வி. சுத்திகரிப்பு நிறுவனங்கள் லாபம் ஈட்டுகிறன, ஆனால் ஏற்றுமதியாளர்கள் வரிகள் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்" என்றார். பெரிதாக நன்மை இல்லாத கொள்முதலைத் தொடர வேண்டுமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். மேலும், "நாம் எந்தவொரு நாட்டையுமே, அது அமெரிக்கா, சீனா அல்லது ஜப்பான் ஆனாலும், அதிகமாக சார்ந்து இருக்கக்கூடாது. தன்னம்பிக்கை இருக்க வேண்டும். மாற்று வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்." என வலியுறுத்தினார்.
உறவு
இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு பெரிய பாதிப்பா?
அமெரிக்க வரி விதிப்பு குறித்து அவர், "இது இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு" என்றும், "விவசாயிகள், ஜவுளி உற்பத்தியாளர்கள் போன்ற சிறு ஏற்றுமதியாளர்கள் இவற்றால் கடுமையாக பாதிக்கப்படுவர்" என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வரி அமெரிக்க நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டியுள்ளார். "அவர்கள் இந்தியப் பொருட்களை 50% கூடுதல் விலையில் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது," என அவர் கூறினார். இந்த நிலைமை இந்திய பொருளாதாரக் களத்தில் தீவிர கவனத்திற்கு உரியது என்பதை ரகுராம் ராஜனின் இந்த கூற்று நன்கு வலியுறுத்துகிறது.