பணிநீக்க இழப்பீட்டுத் தொகைக்கும் வரியா? 14 வருசத்துல 1 கோடி டேக்ஸ் கட்டியும் இப்படியா! ஐடி ஊழியரின் குமுறல் வைரல்
செய்தி முன்னோட்டம்
திடீரென வேலையை இழப்பது என்பது ஒரு நபரின் பொருளாதார நிலையை தலைகீழாக மாற்றிவிடும். தற்பொழுது சமூக வலைதளங்களில் ஐடி ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு, இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவு ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு குறித்த ஒரு புதிய விவாதத்தை நெட்டிசன்கள் மத்தியில் தீயாய் மூட்டியுள்ளது. முகமது நவ்ஸாத் என்ற தொழில்முறை ஊழியர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "14 ஆண்டுகாலத் திரையுலக/கார்ப்பரேட் வாழ்க்கையில் இதுவரை கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்தியுள்ளேன். தற்பொழுது நான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன்." எனப் பதிவிட்டுள்ளார்.
பணிநீக்க இழப்பீட்டுத் தொகை
பணிநீக்க இழப்பீட்டுத் தொகைக்கும் வரி விதிப்பதா? ஊழியர் அதிர்ச்சி
இந்த விவாதம் இத்துடன் முடிவடையாமல், பணிநீக்கத்தின் போது நிறுவனம் வழங்கும் பணிநீக்க இழப்பீட்டுத் தொகை விவகாரத்திலும் ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
"எனக்கு வழங்கப்படும் பணிநீக்க இழப்பீட்டுத் தொகைக்கும் வருமான வரி விதிக்கப்படும் என்பதை தற்பொழுதுதான் அறிந்து கொண்டேன்! என்ன சொல்வதென்றே தெரியவில்லை." என்று நவ்ஸாத் தனது அடுத்த பதிவில் குமுறியுள்ளார்.
வரியை மட்டுமே மிகவேகமாக வசூலிக்கும் அரசு, வேலை இழக்கும் காலங்களில் தனியார் ஊழியர்களுக்கு எவ்வித நிதிப் பாதுகாப்பையும் வழங்குவதில்லை என்று ஒரு தரப்பினரும், அவசரகால நிதியை ஊழியர்களே சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
வரி விதிப்பு
பணிநீக்க இழப்பீட்டுத் தொகைக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது?
இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி, பணிநீக்கத்தின் போது ஒரு ஊழியருக்கு வழங்கப்படும் பணிநீக்க இழப்பீட்டுத் தொகையானது சம்பளத்திற்கு மாற்றான லாபம் என்ற பிரிவின் கீழ் கணக்கிடப்படுகிறது.
இந்த ஒட்டுமொத்த தொகையும் ஊழியரின் அந்த நிதியாண்டின் மொத்த வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அவர் எந்த வருமான வரி வரம்பின் கீழ் வருகிறாரோ, அதற்கேற்ப வரி விதிக்கப்படும்.
இதனுடன் பொருந்தக்கூடிய செஸ் மற்றும் கூடுதல் வரிகளும் வசூலிக்கப்படும்.
ஒருவேளை இந்தத் தொகையில் கிராஜுவிட்டி அல்லது விடுப்பு ஊதியம் இருந்தால், அவற்றுக்கான வரி விலக்குகளை விதிகளின்படி தனியாகக் கோரலாம்.
இபிஎஃப்
வேலை இழந்தவர்கள் இபிஎஃப் பணத்தை எடுக்கும் புதிய விதிமுறை
திடீர் வேலை இழப்பை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு அவர்களின் பிஎஃப் சேமிப்பு ஒரு மிகச் சிறந்த தூணாக விளங்குகிறது.
தற்பொழுது நடைமுறையில் உள்ள புதிய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 2026 விதிகளின்படி, வேலை இழந்த ஒரு ஊழியர் தனது ஒட்டுமொத்த இபிஎஃப் இருப்பில் இருந்து 75 சதவீதம் வரையிலான தொகையை உடனடியாக அவசரத் தேவைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
மீதமுள்ள 25 சதவீத தொகையானது, அவர் தொடர்ந்து 12 மாதங்கள் வேலை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே கணக்கில் இருந்து எடுக்க அனுமதிக்கப்படும்.
கவனிக்க வேண்டியவை
பிஎஃப் பணத்தை எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை
உங்களது இபிஎஃப் பணத்தை ஆன்லைன் மூலம் எவ்விதத் தடையுமின்றி சுலபமாக எடுப்பதற்கு, உங்களுடைய யுஏஎன் எண் முறையாக ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், அந்த எண்ணுடன் உங்களது பான் கார்டு, வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் அடையாள ஆவணங்கள் ஆகியவை துல்லியமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பான பிஎஃப் நிதியை மிக அவசரமான தேவை இருந்தால் ஒழிய, முழுமையாக எடுத்து செலவழிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்று நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.
நிதி மேலாண்மை
அவசரகால நிதி மேலாண்மை
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்களது மாதாந்திர அத்தியாவசிய செலவுகளைப் போல குறைந்தபட்சம் 6 முதல் 12 மாதங்களுக்கான தொகையை அவசரகால நிதி என்ற பெயரில் எப்போதும் தனியாக சேமித்து வைத்திருக்க வேண்டும்.
வேலை இல்லாத இந்த இடைப்பட்ட காலத்தில் வீட்டு வாடகை, கடன் தவணைகள், மருத்துவக் காப்பீடு மற்றும் குடும்ப செலவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தேவையற்ற ஆடம்பர செலவுகளை முற்றிலுமாகத் தவிர்த்து, புதிய வேலை கிடைக்கும் வரை இருக்கும் நிதியை மிகவும் சிக்கனமாக மேலாண்மை செய்வதே புத்திசாலித்தனமாகும்.