பணிநீக்கங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் TCS: ஏப்ரல் 1 முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
செய்தி முன்னோட்டம்
கடந்த ஒரு ஆண்டாக பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய உயர்வு தாமதம் எனப் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்த TCS, மீண்டும் தனது வழக்கமான வருடாந்திர ஊதிய உயர்வு சுழற்சிக்கு ஏப்ரல் 1 முதல் திரும்புவதாக அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டின் பாதியில், ஏஐ (AI) மற்றும் ஆட்டோமேஷன் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்கும் முயற்சியாக, டிசிஎஸ் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2%(12,000 பணியிடங்கள்) பேரை பணிநீக்கம் செய்தது. இந்த அதிரடி மாற்றத்தால் ஊழியர்களின் ஊதிய உயர்வு தள்ளிப்போனதுடன், வேலை பாதுகாப்பு குறித்த அச்சமும் நிலவியது. தற்போது அந்த மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் பழையபடி ஏப்ரல் மாதத்தில் ஊதிய உயர்வை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நாசிக்
நாசிக் சர்ச்சையின் நிழலில் வந்த அறிவிப்பு
இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு ஒரு முக்கியமான நேரத்தில் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக் பிபிஓ (BPO) மையத்தில் அரங்கேறிய பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற புகார்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் நிறுவனத்தின் பணியிடப் பாதுகாப்பு மற்றும் உள் புகார் தீர்க்கும் முறைகள் (Internal Grievance Redressal) குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருபுறம் நாசிக் விவகாரம் நிறுவனத்தின் நற்பெயருக்குச் சவாலாக இருக்கும் நிலையில், மறுபுறம் ஊதிய உயர்வு மூலம் ஊழியர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க டிசிஎஸ் முயன்று வருகிறது. டிசிஎஸ் ஊழியர்களுக்கு இந்த ஏப்ரல் மாத சம்பள உயர்வு ஒரு பெரிய ஆறுதலாக இருக்கும். நிறுவனம் ஒரு நிலையான நிலைக்குத் திரும்புவதை இது காட்டுகிறது.