டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் ராஜினாமா: 2027 பிப்ரவரி வரை பணியில் நீடிப்பார்
செய்தி முன்னோட்டம்
டாடா குழுமத்தின் முதன்மைத் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து என். சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், தனது தற்போதைய பதவிக்காலம் முடிவடையும் 2027 பிப்ரவரி வரை அவர் இப்பதவியில் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வரும் சந்திரசேகரன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ் மற்றும் ஏர் இந்தியா உட்பட 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிறுவனங்களை வெற்றிகரமாக வழிநடத்தி வந்தார். அவரது இந்தத் திடீர் ராஜினாமாவுக்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
முரண்பாடுகள்
ஆண்டுக் பொதுக் கூட்டத்திற்கு முன்பாக திருப்பம்
வரும் ஆகஸ்ட் 18 அன்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் இயக்குநராக சந்திரசேகரனின் மறுநியமனம் குறித்து பங்குதாரர்கள் வாக்களிக்க இருந்த நிலையில், இந்த ராஜினாமா செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சந்திரசேகரனின் பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பான முடிவை டாடா சன்ஸ் ஒத்திவைத்திருந்தது.
டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, சந்திரசேகரனின் மறுநியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பில் ஏற்படவுள்ள இந்த மாற்றம் கார்ப்பரேட் உலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.