கோ பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கும் ஸ்பைஸ்ஜெட்
திவாலான இந்திய விமான சேவை நிறுவனமான கோ பர்ஸ்டை வாங்க மூன்று நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன. கோ பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்குவதற்கு நவம்பர் 22ம் தேதி வரை முன்மொழியலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 22ம் தேதி வரை யாரும் அதற்கான விருப்பம் தெரிவிக்காத நிலையில், தற்போது இந்தியாவைச் சேர்ந்த ஸ்பைஸ்ஜெட், சார்ஜாவைச் சேர்ந்த ஸ்கைஒன் மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு முதலீட்டு நிறுவனம் என மூன்று நிறுவனங்கள் கோ பார்ஸ்டை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கின்றன. மேலும், தங்களுடைய கோரிக்கையை முன்வைக்க கால அவகாசத்தை நீட்டிப்பு செய்யவும் அவை கோரிக்கை விடுத்திருக்கின்றன.
திவால் தீர்வு நடவடிக்கையில் கோ பர்ஸ்ட்:
கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் திவால் தீர்வு நடவடிக்கைக்கு 90 நாட்கள் வரை (2024, பிப்ரவரி 4) கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம். கோ பர்ஸ்டை யாரும் வாங்க முன்வராததைத் தொடர்ந்து, அதனைக் கலைக்கத் திட்டமிட்டு வருகின்றனர் அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள். தற்போது மூன்று நிறுவனங்கள் அதனை வாங்க முன்வந்திருக்கும் நிலையில், கால அவகாச நீட்டிப்பு அல்லது கலைப்பு குறித்து முடிவெடுக்க கோ பர்ஸ்ட்டின் முதலீட்டாளர்களும், அந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்களும் சந்திக்கவிருப்பதாகத் தெரிகிறது. எனினும், கோ பர்ஸ்டை விற்பனை செய்வதைக் காட்டிலும், அதனை மீட்டெழுப்பவே அதற்கு கடன் கொடுத்தவர்கள் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.