பங்குச்சந்தையில் ஆரம்பக்கட்ட சரிவுக்குப் பின் மீட்சி! 350 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்! 3 முக்கிய காரணங்கள்
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை (ஜூன் 11) வர்த்தகத்தின் ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்த இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கீழ் மட்டங்களில் காணப்பட்ட ஆதரவு காரணமாகத் தங்களின் சரிவை கணிசமாகக் குறைத்துக் கொண்டன. காலை 10 மணி அளவிலான வர்த்தகத்தில், சென்செக்ஸ் 231.51 புள்ளிகள் சரிந்து 73,751.67 புள்ளிகளிலும், நிஃப்டி 71.55 புள்ளிகள் சரிந்து 23,143.40 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. எனினும், அதன் பின்னராக நாளின் குறைந்தபட்ச புள்ளிகளில் இருந்து சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரை அதிரடியாக உயர்ந்து வலுவான மீட்சியைப் பதிவு செய்துள்ளது.
சந்தை நிலவரம் மற்றும் காரணங்கள்
பங்குச்சந்தை சரிவிலிருந்து மீள்வதற்கான முக்கிய காரணங்கள்
வர்த்தகத்தின் தொடக்கத்தில் பங்குகள் விலை சரிந்ததைத் தொடர்ந்து, கீழ் மட்டங்களில் முதலீட்டாளர்களிடையே பங்குகளை வாங்குவதற்கான ஆர்வம் (Buying interest) அதிகரித்தது. இது சந்தை மீண்டும் எழுச்சி பெற பெரிதும் உதவியது. நிஃப்டி குறியீடு தனக்கான முக்கிய ஆதரவு நிலைகளுக்கு அருகில் நகர்ந்தது சந்தைக்குச் சாதகமாக அமைந்தது. நிஃப்டியின் உடனடி ஆதரவு நிலை 23,200 ஆகவும், முக்கியப் பொசிஷனல் ஆதரவு மண்டலம் 23,000-23,100 ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது. சந்தையின் முக்கிய எதிர்ப்பு மண்டலம் 23,450-23,550 என்ற அளவில் உள்ளது.
உலகளாவிய சிக்னல்கள்
வலுவான உலகளாவிய சிக்னல்கள்
முந்தைய நாள் அமெரிக்கச் சந்தைகள் சரிவுடன் முடிந்திருந்தாலும், வால் ஸ்ட்ரீட் ஃபியூச்சர்ஸ் வர்த்தகம் சாதகமான பச்சை நிறக் குறியீட்டில் தொடர்ந்தது. இது அமெரிக்கச் சந்தைகள் இன்று நேர்மறையாகத் தொடங்கும் என்பதைக் காட்டியதால் இந்தியச் சந்தையிலும் மீட்சி ஏற்பட்டது. அமெரிக்கா - ஈரான் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கிய நிலையில், இருதரப்பும் குண்டுமழை பொழிந்தால் இந்திய பங்குச் சந்தையில் அதன் தாக்கம் பின்னைடைவை ஏற்படும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.