Loading...
செமிகான் 2.0: சிப் ஸ்டார்ட்அப்களில் பங்குகளை வாங்கும் மத்திய அரசு; முதலீட்டை ஊக்குவிக்க புதிய திட்டம்
சிப் ஸ்டார்ட்அப்களில் பங்குகளை வாங்கும் மத்திய அரசு

செமிகான் 2.0: சிப் ஸ்டார்ட்அப்களில் பங்குகளை வாங்கும் மத்திய அரசு; முதலீட்டை ஊக்குவிக்க புதிய திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 20, 2026
04:12 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், மத்திய அமைச்சரவை அண்மையில் ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பிலான செமிகான் 2.0 (Semicon 2.0) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், உள்நாட்டு சிப் வடிவமைப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, அரசு அவற்றின் பங்குகளின் மீது நேரடியாக முதலீடு செய்யவுள்ளதாக இந்தியா செமிகண்டக்டர் மிஷனின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதேஷ் குமார் சின்ஹா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். நிறுவனங்கள் நல்ல நிலையை எட்டியவுடன் இந்த முதலீடுகளில் இருந்து அரசு வெளியேறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசு முதலீடு

வென்ச்சர் கேபிடல் நிதிகளுக்கு இணையாக அரசு முதலீடு

இந்த புதிய திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சந்தையில் உள்ள தனியார் வென்ச்சர் கேபிடல் நிதிகள் ஒரு சிப் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்கிறார்களோ, அதற்கு இணையான தொகையை அரசாங்கமும் அந்த நிறுவனத்திற்கு வழங்கும்.

ஆரம்பக்கட்ட சீட் ஃபண்டிங் முதல் சீரிஸ் A, B மற்றும் C போன்ற அடுத்தடுத்த அனைத்து நிதித் திரட்டல் நிலைகளிலும், தனியார் முதலீட்டாளர்கள் என்னென்ன வணிக நிபந்தனைகளின் அடிப்படையில் முதலீடு செய்கிறார்களோ, அதே விதிமுறைகளின் படியே அரசாங்கமும் சரிபாதி நிதியை வழங்கி பங்குகளைப் பெறும் என்று சின்ஹா விளக்கியுள்ளார்.

நிர்வாகம் 

நிர்வாகக் கட்டுப்பாட்டில் அரசு தலையிடாது

சிப் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பங்குகளைப் பெற்றாலும், அரசாங்கம் ஒரு நிதி முதலீட்டாளராக மட்டுமே இருக்குமே தவிர, நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளிலோ அல்லது நிர்வாக முடிவுகளிலோ எவ்விதக் கட்டுப்பாட்டையும் செலுத்தாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

"நாங்கள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய விரும்புகிறோமே தவிர, அவர்களின் அன்றாட வேலைகளில் தலையிட விரும்பவில்லை" என்று கூறிய சின்ஹா, இதற்காக நிறுவனத்தின் போர்டு இயக்குநர் பதவிகளை அரசு கோராது என்றும், நிறுவனர்களின் கட்டுப்பாட்டிலேயே முழு நிர்வாகமும் நீடிக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

ADVERTISEMENT

பங்குகள்

நிறுவனங்கள் வளர்ச்சியடைந்ததும் பங்குகளைத் திரும்பப் பெறலாம்

செமிகண்டக்டர் வடிவமைப்பு என்பது அதிகக் முதலீடும், நீண்ட கால அவகாசமும் தேவைப்படும் ஒரு துறையாகும்.

எனவே, இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வணிக ரீதியாக செயல்பட்டு வருவாய் ஈட்டத் தொடங்கியவுடன், அவர்கள் தங்களது நிறுவனத்தின் மீதான முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக, அரசாங்கத்தின் வசம் உள்ள பங்குகளை தாராளமாக விலை கொடுத்துத் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.

மேலும், இந்த ஸ்டார்ட்அப்கள் வேறு பெரிய நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டால், அரசாங்கம் தனது பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பை மட்டும் பெற்றுக்கொண்டு முதலீட்டை பணமாக்கிக் கொள்ளும்.

ADVERTISEMENT

ராயல்டி

பெரிய நிறுவனங்களுக்கு ராயல்டி அடிப்படையிலான உதவி

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஈக்விட்டி பங்குகள் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படும் வேளையில், ஏற்கனவே சந்தையில் பெரிய அளவில் நிலைபெற்றுள்ள முன்னணி நிறுவனங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட ராயல்டி அடிப்படையிலான நிதியுதவி மாடலை அரசு பின்பற்றவுள்ளது.

இதன்படி, பெரிய நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் நிதியுதவியானது, அந்நிறுவனங்கள் தங்களது வணிக உற்பத்தியைத் தொடங்கி வருவாய் ஈட்ட ஆரம்பித்த பிறகு, அரசாங்கம் கொடுத்த நிதியைப் போல 1.5 மடங்கு தொகையாக ராயல்டி முறையில் அரசிடம் திருப்பி செலுத்த வேண்டும் என்று அமிதேஷ் குமார் சின்ஹா தெளிவுபடுத்தியுள்ளார்.

ADVERTISEMENT