சில்லறை பணவீக்கம் 5 மாதம் இல்லாத அளவு சரிந்தது
இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் ஐந்து மாதங்கள் இல்லாத அளவு 4.87% ஆகக் குறைந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு(சிபிஐ) மூலம் அளவிடப்படும் இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் 4.87%ஆக குறைந்தது. சில பொருட்களின் விலை முன்பிருந்ததை விட குறைந்ததை அடுத்து, பண வீக்கமும் சரிந்தது. எனினும், வெங்காய விலையில் ஏற்பட்ட உயர்வு, பணவீக்கத்தை வீழ்ச்சி அடையாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் இந்தியாவின் பண வீக்கம் 4.8% ஆக குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். அந்த கணிப்புகள் தற்போது உண்மையாகி இருக்கிறது.
வெங்காயத்தை தவிர, உணவு பொருட்களின் பணவீக்கத்தில் பெரிய மாற்றம் இல்லை
எனவே, அக்டோபர் மாதத்திற்கான பணவீக்க விகிதம் பெரும்பாலும் எதிர்பார்த்தது போலவே இருந்தது. மேலும், செப்டம்பர் மாதத்தில் இருந்து உணவுப் பணவீக்கம் சீராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களில், காய்கறிகளின் மாத வளர்ச்சி 3.4%ஆக இருந்தது. முக்கியமாக வெங்காய விலை 15% உயர்ந்தது. உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி போன்ற பிற முக்கிய காய்கறிகளின் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை. உருளைக்கிழங்கின் விலை மாறாமல் இருந்தது. அதே நேரத்தில் தக்காளியின் விலை 19%(MoM) குறைந்தது. ஒட்டு மொத்தமாக, செப்டம்பர் மாதத்தில் 6.62% ஆக இருந்த நுகர்வோர் உணவுப் பொருட்களின் பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 6.61% ஆக குறைந்தது.
அக்டோபரில் பணவீக்கத்தை பாதித்த பிற காரணிகள்
காய்கறிகளின் விலை உயர்வை தவிர, முட்டை விலை 3.4% (MoM) உயர்ந்தது. அதே நேரத்தில் பருப்பு வகைகளின் பணவீக்கம் 2.5 சதவீதமும், தானியங்களின் பணவீக்கம் 0.8 சதவீதமும் உயர்ந்தது. எனவே, பணவீக்கம் உயர்ந்து, விலை அதிகரிக்கும் வேகம் கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது. அக்டோபர் மாதத்தில், இந்த பணவீக்கங்களை சமநிலைப்படுத்த சமையல் எண்ணெய்களின் விலை மிக உதவியாக இருந்தது. கடந்த மாதம், சமையல் எண்ணெய்களின் விலை 0.8% MoM குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த பணவீக்கம் சரிந்த போதிலும், தொடர்ந்து 49 மாதங்களுக்கு மேலாக, இந்திய பணவீக்கம், ரிசர்வ் வங்கியின(RBI) இலக்கான 4%க்கு மேல் நீடித்து வருகிறது. மேலும், ரிசர்வ் வங்கியின் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பான 2-6%க்குள் தான் இந்திய பணவீக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.