திரும்ப பெறாத 2,000 ரூபாய் நோட்டுக்கள் குறித்த தகவலை வெளியிட்ட ரிசர்வ் வங்கி
இந்த ஆண்டு மே 19ம் தேதியன்று இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. இந்த நடவடிக்கைக்காக செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 30ம் தேதி நிறைவடைந்த பின்பும் பலரும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் இருந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 7ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அந்த கால அவகாசமும் முடிந்து தற்போது இரு மாத காலம் கடந்திருக்கும் நிலையில், இன்னும் 2.7% 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப வரவில்லை எனத் தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. அதாவது, 9,760 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப வரவேண்டியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
நம்மிடமிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களை என்ன செய்வது?
2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றக் கொடுத்த கால அவகாசம் முடிந்திருக்கும் நிலையில், இன்னும் யாரிடமாவது ரூபாய் நோட்டுக்கள் தவறுதலாக இருந்தால் அதனை மாற்றும் வழிமுறைகளையும் முன்பே தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. அதன்படி, அருகில் உள்ள ரிசர்வ் வங்கியில் செலுத்தியோ அல்லது தபால் மூலம் அனுப்பியோ அந்த 2,000 ரூபாய் நோட்டுக்களை நாம் மாற்றிக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களுள் ஒன்று சென்னையில் இருக்கிறது. அப்படி ரிசர்வ் வங்கியில் மாற்ற முடியாதவர்கள், இந்திய அஞ்சல் நிலையங்களில் உள்ள தங்களுடைய கணக்கில் அதனை வரவு வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. அஞ்சல் அலுவலகங்களில் வரவு மட்டுமே வைக்க முடியும் என்பதும், மாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.