மூன்றாவது முறையாக 6.5 சதவிகிதம் ரெப்போ ரேட்: மாற்றம் செய்யாத நிதிக் கொள்கைக் குழு
இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டமானது, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தற்போது அறிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, மூன்றாவது முறையாக ரெப்ரோ ரேட்டில் மாற்றம் செய்யாமல், 6.5 சதவிகிதமாகவே தொடரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கிகளுக்குக் கொடுக்கப்படும் கடனுக்கான Marginal Standing Facilty Rate-லும் மாற்றம் செய்யாப்படாமல், 6.75%-தத்துடனே தொடர முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. பணவீக்கத்தைக் குறைத்து, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கடந்தாண்டு மே மாதம் முதல் 250 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தியது ரிசர்வ் வங்கி. மேலும், பணவீக்க இலக்கையும் மாற்றாமல் அதே 4%-ஆகவே தொடரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
இந்த நிதிக் கொள்கைக் கூட்டத்தில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து தற்போதைய அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர். அதன் படி, 2023-24 நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பிலும் மாற்றம் செய்யாமல் 6.5%-மாகவே வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டின் நுகர்வோர் பொருட்களை விலை உயர்வுக் கணிப்பை 5.1%-தத்தில் இருந்து 5.4%-ஆக உயர்த்தியிருக்கிறது நிதிக் கொள்கைக் குழு. மூன்றாவது முறையாக ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யப்படாததையடுத்து, இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ், 0.50% மற்றும் 0.55% சரிவைச் சந்தித்திருக்கின்றன. UPI லைட் வசதி மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் அளவை ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக உயர்த்தியிருப்பதாக இன்றைய அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்.