ரூ.2000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு: இனி எப்போது வரை மாற்றலாம்?
2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றுவதற்கான கடைசி தேதியை இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் 7, 2023 வரை நீட்டித்துள்ளது. அனைத்து ரூ.2,000 கரன்சி நோட்டுகளையும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மாற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்பு கூறியிருந்த நிலையில், அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, அந்த கால அவகாசத்தை இன்னும் 7 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
அக்டோபர் 8 ஆம் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் ஏற்காது
செப்டம்பர் 29ம் தேதி வரை ரூ.3.42 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், தீவிர ஆய்வுக்கு பிறகு ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி முதல் வங்கிகள் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ மாற்றவோ முடியாது என்றும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், 19 RBI வெளியீட்டு அலுவலகங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை அந்த தேதிக்கு பிறகும் மாற்றிக் கொள்ளலாம்.