இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி வடிவத்தை நெருங்குகிறது: அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மோடி, டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் நாட்டின் எவியான் (Evian) நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டின் (G7 Summit) பக்கவாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த 16 மாதங்களில் இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற முதல் நேரடிச் சந்திப்பு இதுவாகும். இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அதனை மிக விரைவாக இறுதி செய்யுமாறு இரு நாட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கும் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வர்த்தக ஒப்பந்தம்
வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளது: வெளியுறவுச் செயலாளர்
இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய இந்திய வெளியுறவுச் செயலாளர், "இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த ஓராண்டாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த சில வர்த்தக ரீதியான நிச்சயமற்ற தன்மைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியமாக இருந்தது" என்றார். இரு தலைவர்கள் சந்திப்பில் இது குறித்து பேசப்பட்டதாகவும் அவர் கூறினார். "ஓர் இடைக்கால சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் இரு நாடுகளும் ஏற்கனவே கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. பிரதமர் மோடி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருமே இந்த ஒப்பந்தத்தை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்கத் தங்களின் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்."
மற்ற நாடுகள்
பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் மோடி ஆலோசனை
ஜி7 மாநாட்டின் போது அமெரிக்கா மட்டுமன்றி, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களான அந்தோனியோ கோஸ்டா, உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்த அனைத்துச் சந்திப்புகளிலும் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதே இந்தியாவின் முதன்மை இலக்காக இருந்தது. மத்திய கிழக்கில் நீடித்த அமைதியும் பாதுகாப்பும் நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்று குறிப்பிட்ட வெளியுறவுச் செயலாளர், இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் இதில் தொடர்புடைய பெரும்பாலான உலக நாடுகளுடன் இந்தியா தொடர் தொடர்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.