'புழக்கத்தில் இருந்த 97 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன': ரிசர்வ் வங்கி
மே 2023 முதல் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 97% திரும்ப பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி(RBI) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி நிலவரப்படி ரூ.3.56 லட்சம் கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. தற்போது அதில் 97 சதவீதம் திரும்பபெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு பிப்ரவரி 29, 2024 நிலவரப்படி ரூ.8,470 கோடியாகக் குறைந்துள்ளது. ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டாலும், அந்த நோட்டுகள் சட்டப்படி செல்லும் என்றும், அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.2,000 நோட்டுகளின் அறிமுகமும் மறைவும்
பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பணத் தேவையை நிவர்த்தி செய்வதற்காக 2000 ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பிருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற வகை நோட்டுகளுக்கு போதுமான அளவு சப்ளை கிடைத்ததால் ரூ.2,000 நோட்டின் அச்சடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, பரிவர்த்தனைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுவதை கவனித்த ரிசர்வ் வங்கி, 'சுத்தமான நோட்டு கொள்கையின்' படிஅந்த நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்தது.