டெக் உலகில் மீண்டும் ஒரு இடி; 30,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆரக்கிள்
செய்தி முன்னோட்டம்
உலக புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், தனது செலவுகளை குறைக்கும் நோக்கில் 20,000 முதல் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை இந்த மாதமே தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சாம் ஆல்ட்மேனின் 'OpenAI' நிறுவனத்துடன் இணைந்து AI தரவு மையங்களை உருவாக்க ஆரக்கிள் சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதற்காக தேவைப்படும் மிகப்பெரிய மூலதனமே இந்தப் பணிநீக்கத்திற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
கடன்
கடன் சுமை காரணமாக இந்த நிலையை எட்டியதா ஆரக்கிள்?
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் டெக்சாஸ், விஸ்கான்சின் மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகிய இடங்களில் தரவு மையங்களை அமைக்க சுமார் 58 பில்லியன் டாலர் கடனை ஆரக்கிள் வாங்கியுள்ளது. இதனால் நிறுவனத்தின் மொத்தக் கடன் 100 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட இந்த மறுகட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் நிறுவனம் சுமார் 1.6 பில்லியன் டாலர் செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 மே மாத நிலவரப்படி, ஆரக்கிள் நிறுவனத்தில் உலகளவில் 1,62,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது திட்டமிடப்பட்டுள்ள 30,000 பேர் பணிநீக்கம் என்பது மொத்தப் பணியாளர்களில் கணிசமான பங்காகும். குறிப்பாக, AI தொழில்நுட்பத்தால் மாற்றீடு செய்யப்படக்கூடிய பணிகளில் இருப்பவர்களே இலக்கு வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பணிநீக்கங்கள்
டெக் துறையில் தொடரும் பணிநீக்கங்கள்
AI போட்டியில் தங்களை தக்கவைத்துக்கொள்ள மற்ற நிறுவனங்களும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன அமேசான்: இந்த ஆண்டின் தொடக்கத்தில் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. மைக்ரோசாப்ட்: கடந்த ஆண்டில் 15,000 பேரைப் பணிநீக்கம் செய்தது. பிளாக்: தனது ஊழியர்களில் பாதியளவு (சுமார் 3,500 பேர்) குறைத்துள்ளது. சேல்ஸ்போர்ஸ்: கடந்த ஓராண்டில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கியுள்ளது.