மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி கொடுக்கும் நிறுவனங்கள்; பின்னணி என்ன?
தகவல் தொழில்நுட்ப துறையில் ஊழியர்களை அலுவலகங்களுக்கு முழுமையாக திரும்ப அழைத்த பல நிறுவனங்கள் தற்போது தங்கள் முடிவிலிருந்து பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஃப்ளெக்ஸ் இண்டெக்ஸ் நடத்திய ஆய்வில், தொழில்நுட்ப நிறுவனங்களின் ரிட்டர்ன்-டு-ஆஃபீஸ் (ஆர்டிஓ) கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. 11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணிபுரியும் 2,670 தொழில்நுட்ப நிறுவனங்களை ஆய்வு செய்த ஆய்வில், இப்போது 3% பேர் மட்டுமே தங்கள் ஊழியர்கள் முழு நேரமும் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கண்டறிந்துள்ளனர். இதற்கிடையே, 2023இல் ஹைபிரிட் பணி சூழல் கொண்டிருந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை 75% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 79% ஆக அதிகரிப்பதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான அனுமதிக்கான காரணம்
பல்வேறு துறைகளில் உள்ள உள்ள தலைமை செயல் அதிகாரிகள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தங்கள் நிலைப்பாட்டை மென்மையாக்கியுள்ளனர் என்பதை ஆய்வு காட்டுகிறது. குறைந்தபட்சம் $500 மில்லியன் வருமானம் கொண்ட நிறுவனங்களின் அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஆய்வில், மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே அடுத்த மூன்று ஆண்டுகளில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு முழுமையாக திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். அமேசானின் 30,000 பணியாளர்கள் அலுவலகத்திற்கு கட்டாயம் வரவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராக மனுவை கொடுத்துள்ள நிலையில், ஊழியர்களின் எதிர்ப்பின் காரணமாக பல நிறுவனங்களும் இந்த முடிவிற்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.