பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தும் எண்ணெய் நிறுவன பங்குகள் சரிந்தது ஏன்? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
மே 15, 2026 முதல் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹3 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விலை உயர்த்தப்பட்டாலும், பங்குச் சந்தையில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) பங்குகள் 2.65% சரிந்து ₹367.10க்கும், பாரத் பெட்ரோலியம் (BPCL) 2% சரிந்து ₹289.05க்கும் விற்பனையாகின. சந்தை ஆய்வாளர்களின் கணிப்புப்படி, கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட இந்த ₹3 உயர்வு போதுமானதாக இல்லை என்பதே முதலீட்டாளர்களின் அதிருப்திக்கு முக்கியக் காரணமாகும்.
எதிர்பார்த்ததை விடக் குறைவான விலை உயர்வு
சந்தை நிபுணர்கள் கணித்த ₹5 முதல் ₹6 உயர்வு எங்கே?
பங்குச் சந்தை வட்டாரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ₹5 முதல் ₹6 வரை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசு வெறும் ₹3 மட்டுமே உயர்த்தியுள்ளது. "பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், மக்களின் சுமையைக் குறைக்கவும் அரசு படிப்படியான உயர்வைக் கடைபிடிக்கிறது" என்று ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸின் வி.கே.விஜயகுமார் தெரிவித்துள்ளார். இருப்பினும், நிறுவனங்கள் இலாபம் ஈட்ட வேண்டுமானால் இன்னும் லிட்டருக்கு ₹15 முதல் ₹20 வரை உயர்த்த வேண்டியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய அரசியல் ஏற்படுத்திய தாக்கம்
கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி சர்ச்சை
சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $107ஐத் தாண்டியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எண்ணெய் சந்தையைத் தொடர்ந்து அதிர வைத்து வருகிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருக்க வேண்டும் என்பதில் தான் அதிக அக்கறை காட்டவில்லை என்று கூறியது எரிசக்தி சந்தையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வழிவகுக்கலாம் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.
தினமும் ₹1,000 கோடி நஷ்டம்
எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் நிதி நெருக்கடி
கடந்த சில மாதங்களாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் லிட்டருக்கு ₹20 மற்றும் டீசலில் லிட்டருக்கு ₹100 வரை நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகச் சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்த நிறுவனங்களுக்குத் தினமும் ₹1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொள்ளும்போது, தற்போது செய்யப்பட்டுள்ள ₹3 உயர்வு என்பது கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என்பதே யதார்த்தம் என்று தொழில்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை
மெகா விலை உயர்வை நோக்கி நகர்கிறதா இந்தியா?
தமிழகம், கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் டெல்லியில் ₹97.77க்கும், சென்னையில் ₹103.67க்கும் விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து $100க்கு மேல் நீடித்தால், வரும் நாட்களில் எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் நஷ்டத்தை சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிதி நெருக்கடியால் நடப்பு நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் மற்றும் டிவிடெண்ட் வழங்குவது கேள்விக்குறியாகியுள்ளது.