அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிற்கு அதிக எரிவாயு வழங்கும் நாடாக உருவெடுத்தது ஓமன்; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) அதிகம் விநியோகம் செய்யும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஓமன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழிப் பாதையில் பெரும் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் செப்டம்பர் 2026 மாதத்தில் இந்தியாவின் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஓமன் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
ஹார்முஸ் நெருக்கடி
ஹார்முஸ் நெருக்கடியும் விநியோகப் பாதை மாற்றமும்
வழக்கமாக இந்தியாவின் எல்என்ஜி தேவையில் சுமார் 60% ஹார்முஸ் ஜலசந்தி வழியே கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தே இறக்குமதி செய்யப்படும்.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்களால் கத்தாரில் இருந்தான விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஓமன் நாட்டின் எல்என்ஜி ஏற்றுமதி மையங்கள் இந்த அபாயகரமான ஹார்முஸ் ஜலசந்தி பகுதிக்கு வெளியே அமைந்துள்ளதால், எந்தவிதத் தடையுமின்றி இந்தியாவிற்கு சரக்குகளை அனுப்ப ஓமனால் முடிந்துள்ளது.
ஏற்றுமதி சரிவு
செப்டம்பர் மாதத் தரவுகளும் அமெரிக்க ஏற்றுமதி சரிவும்
கெப்ளர் தரவுகளின்படி, செப்டம்பரில் ஓமனில் இருந்து இந்தியா பெற்ற எல்என்ஜி இறக்குமதி 11.6% உயர்ந்து 0.59 மில்லியன் டன்களாக உள்ளது.
அதேவேளையில் அமெரிக்காவில் இருந்து வந்த ஏற்றுமதி 60.7% வரை சரிந்து 0.34 மில்லியன் டன்களாகக் குறைந்தது.
அமெரிக்க எல்என்ஜி பெருமளவில் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டதே இதற்குக் காரணமாகும்.
நைஜீரியா 0.35 மில்லியன் டன்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
தேவை அதிகரிப்பு
விலையேற்றத்திற்கு இடையிலும் மீண்டு வரும் இந்தியத் தேவை
சர்வதேச அளவில் எல்என்ஜி விலை அதிகமாக இருந்தபோதிலும், இந்தியாவின் ஒட்டுமொத்த எல்என்ஜி இறக்குமதி செப்டம்பரில் 2.24 மில்லியன் டன்களாகப் பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 7% கூடுதலாகும். சீனாவும் ஜப்பானும் அதிக விலை காரணமாகக் கொள்முதலைக் குறைத்த நிலையில், உரத் தயாரிப்புத் துறை மற்றும் நகர எரிவாயு விநியோகத்தின் தவிர்க்க முடியாதத் தேவைகள் காரணமாக இந்தியா தொடர்ந்து சந்தையில் எரிவாயுவை வாங்கி வருகிறது.