இந்திய நிறுவனங்கள் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் OCCRP அமைப்பு
இந்த ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த வணிகக் குழுமமான அதானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தையில் கடும் சரிவைச் சந்தித்தன. தற்போது OCCRP என்ற மற்றொரு புலனாய்வு அமைப்பொன்று, குறிப்பிட்ட சில இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை அம்பலப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள 24 லாப நோக்கமற்ற புலனாய்வு மையங்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர். 2006-ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, இதுவரை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், நிறுவனங்கள் மற்றும் முக்கிய குற்றங்கள் குறித்து புலனாய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
என்ன விதமான தகவல்களை வெளியிடவிருக்கிறது OCCRP?
குறிப்பிட்ட இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்த தகவல்களை OCCRP அமைப்பு வெளியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், எந்தெந்த இந்திய நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவிருக்கின்றன எனத் தெரியவில்லை. உலக பணக்காரர்களுள் ஒருவரான ஜார்ஜ் சாரோஸ் மற்றும் ராக்ஃபெல்லர் பிரதர்ஸ் ஃபண்டு ஆகியோர் இந்த புலனாய்வு நிறுவனத்திற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இதுவரை இந்நிறுவனம் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகளின் பலனாக அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் Ceo-க்கள் என 131 பேர் தங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள், 621 கைதுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன மற்றும் 702 அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த அமைப்பின் திட்டங்களில் பணிபுரிந்து பல்வேறு பத்திரிகையாளர்கள் உலகம் முழுவதும், பல்வேறு புலனாய்வு இதழியலுக்கான விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.